செல்போன் பறிக்க முயன்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் மற்றும் சாலையில் கிடந்த ரூ.2,99,100- அடங்கிய பையை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்து உரிமையாளாரிடம் சேர்க்க வைக்க உதவிய நபர் ஆகிய இருவரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
செல்போன் கொள்ளையனை விரட்டிப் பிடித்த துணிச்சல் வாலிபர்
சென்னை, மத்திய கைலாஷ், களிகுன்றம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா, 49. கடந்த 20.03.2022 அன்று மாலை 5 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கவுசல்யா வீட்டின் ஜன்னல் வழியாக செல்போனை திருட முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த கவுசல்யா கூச்சலிட செல்போன் பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட கவுசல்யாவின் கணவர் ஜீவானந்தம் தப்பியோடி நபரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் முகிலரசன், 24, சென்னை, ஜாபர்கான் பேட்டை, புஷ்பாவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் முகிலரசன் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகிலரசன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 46. கடந்த 17.03.2022 அன்று மாலை 4.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு, BeWell மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் அதிகளவு பணம் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே மணிவண்ணன் அவசர அழைப்பு எண் 100ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். திருமங்கலம் சுற்றுக்காவல் ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று மணிவண்ணனிடம் விசாரணை செய்தனர். பையிலிருந்த பணத்தை சரிபார்த்த போது, அதில் ரூ. 2,99,100- இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் பணத்தை தவறவிட்டவர் சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 25 என்பது தெரியவந்தது. சந்தோஷ் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருவதும், வசூல் செய்த பணத்தை பார் ஒப்பந்ததாரர் செந்தில் என்பவரிடம் ஒப்படைக்க எடுத்து சென்ற போது, இருசக்கர வாகனத்திலிருந்த பணப்பை தவறி சாலையில் விழுந்துள்ளது தெரியவந்தது. மேலும் சந்தோஷ் கூறிய அடையாளங்களை வைத்து மேற்படி பணம் சந்தோஷ் வேலை செய்யும் பார் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன் பேரில் செந்திலை நேரில் வரவழைத்து ரூ.2,99,100- போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
செல்போன் திருட முயன்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு.ஜீவானந்தம், திருமங்கலம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2,99,100/-ஐ அடங்கிய பையை போலீசாரிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய மணிவண்ணன் ஆகிய இருவரை கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று (23.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.