Take a fresh look at your lifestyle.

துணிக்கடைக்குள் புகுந்து பணம், நகை கொள்ளை: செங்கல்பட்டு திருடர்கள் 3 பேர் கைது

105

சென்னை கேளம்பாக்கத்தில் துணிக்கடைக்குள் புகுந்து ஊழியரைக் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம், கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலையில் பிஎஸ்வி எக்ஸ்போர்ட் என்ற ரெடிமேட் ஆடை நிறுவனம் உள்ளது. இதன் முகப்பில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான துணிக்கடை இயங்கி வருகிறது. கடந்த 27ம் தேதி இரவு 9.15 மணியளவில் துணிக்கடைக்கு துணி எடுப்பது போல நுழைந்த 5 பேர் பேர் கடை ஊழியர் சந்துரு என்பவரை கத்தியைக்காட்டி மிரட்டி ஷட்டரை மூடியுள்ளனர். பின்னர் சந்துருவை மிரட்டி கல்லாவில் இருந்த ரூ. 5 ஆயிரம் பணம், இரண்டு பெட்டி புதுத்துணிகள் மற்றும் சந்துரு அணிந்திருந்த 3 மோதிரம், தங்கச் சங்கிலி, சந்துருவின் வங்கிக் கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ்தங்கையா மேற்பார்வையில் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டது. கேளம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ், எஸ்ஐ வெங்கடேசன், தலைமை காவலர்கள் பிரேம், ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக செங்கல்பட்டைச் சேர்ந்த பிரதாப் (28), பரத்குமார் (22), பிரபா என்கிற பிரபாகரன் (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க மோதிரம் 3 மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை மீட்டனர். விசாரணைக்குப்பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.