ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக, அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27.-2.-2023 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசுவுக்கு, ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் அண்ணா தி.மு.க. சார்பில் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில், தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதே வகையான ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் தி.மு.க. அரங்கேற்றியது.
‘‘வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் வினியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோவில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வாக்கு கொள்ளை நடத்தல்” என்று தி.மு.க. நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அண்ணா தி.மு.க. வெளிக்கொண்டுவந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சாதி, மத ரீதியாக மக்களைப் பிளந்து அதன் மூலமாக வாக்குகளைப் பெறும், வழக்கமான தி.மு.க.வின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தையே மூடி வைக்கும் அளவுக்கு சுமார் 30 அமைச்சர்களும், தி.மு.க.வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும், ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு இந்த ஜனநாயக படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இச்சூழ்நிலையில், ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், தி.மு.க.வினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது தி.மு.க.வுக்கு அழகல்ல. தி.மு.க. ஏற்கனவே திட்டமிட்டபடி, கடைசி ஒரு மணி நேரத்தில் அதிகமான வாக்குப்பதிவு செய்துள்ளது மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி, அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் தி.மு.க. தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி. தமிழ்நாட்டின் அரசியல் அறத்தின் தோல்வி. ‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” என்கிறது தமிழ். அறத்தையே அழித்தொழிக்கும் அரசியல் பிழைகளை நிகழ்த்தி இருக்கும் தி.மு.க.வின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
இத்தனை அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் தாண்டி, தி.மு.க.வின் 22 மாத கால ஆட்சியின் அவலங்களை உணர்ந்து, ஆட்சியாளர்களின் போக்குக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில் அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து, மாற்றத்திற்கு அச்சாரமிட்டிருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள். தி.மு.க.வின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், பொய் பிரச்சாரத்தால் குழம்பி போகாமல், தி.மு.க.வின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அண்ணா தி.மு.க.வின் கரங்களை வலுப்படுத்தியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது பேரன்பையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.