Take a fresh look at your lifestyle.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இதுவரை ரூ.3,657 கோடி கோவில் நிலம், சொத்து மீட்பு: கவர்னர் அறிவிப்பு

76

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இதுவரை ரூ.3 ஆயிரத்து 657 கோடி கோவில் சொத்துகள், நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.

கவர்னர் இன்று சட்டசபையில் ஆற்றிய உரையில் கூறியதாவது:

ஒப்பாரும்‌ மிக்காரும்‌ ஒல்லா தமிழ்‌ மாமன்னர்‌ ராசராச சோழனின்‌ அரும்பெருமைகளைப்‌ போற்றும்‌ நோக்குடன்‌ அவரது பிறந்தநாளான ‘சதயவிழா’ இனி அரசு விழாவாகக்‌ கொண்டாடப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. மேலும்‌. சோழப்‌ பேரரசின்‌ புகழைக்‌ காட்சிப்படுத்தும்‌ வகையில்‌ இராசராச சோழனின்‌ மணிமண்டபம்‌ புதுப்பிக்கப்பட்டு மெருகேற்றப்படும்‌ எனவும்‌, உலகாண்ட தமிழ்‌ மாமன்னர்‌ இராசேந்திர சோழனின்‌ பிறந்தநாளான ஆடி திருவாதிரை இனி அரசு விழாவாகக்‌ கொண்டாடப்படும்‌ எனவும்‌ முதலமைச்சர்‌ அறிவித்துள்ளார்.

மாநிலத்தில்‌ உள்ள தொல்பொருள்‌ மற்றும்‌ வரலாற்று நினைவுச்‌ சின்னங்களின்‌ செழுமையான மரபினைப்‌ பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகள்‌ அரசால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழடி அகழாய்வில்‌ கிடைத்த தொல்பொருட்களைக்‌ காட்சிப்படுத்து வதற்காக அமைக்கப்படும்‌ உலகத்தரம்‌ வாய்ந்த அருங்காட்சியகத்தின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நிறைவடையும்‌ தருவாயில்‌ உள்ளன. இதுபோன்றே, ஆதிச்சநல்லூர்‌, கொற்கை, சிவகளை ஆகிய பகுதிகளில்‌ அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக்‌ காட்சிப்படுத்துவதற்கான ‘பொருநை அருங்காட்சியகம்‌’ அமைக்கும்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன.

இந்த அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்றதிலிருந்து கோவில்‌ நிலங்களையும்‌, உடைமைகளையும்‌ பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகின்றது. இதுவரையில்‌ 3,657 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள நிலங்களும்‌, சொத்துகளும்‌ மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மகத்தான இப்பணிகளுக்காக தமிழ்நாடு அரசிற்கு என்‌ மனமார்ந்த பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்த ஆண்டு, 158 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 34 கோவில்களின்‌ புதிய கட்டுமானப்‌ பணிகளை அரசு தொடங்கியுள்ளது. மேலும்‌, திருச்செந்தூர்‌ திருக்கோவில்‌ பகுதியில்‌ 300 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பெருந்திட்ட வளாகப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.

அனைவரையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையுடன்‌ செயல்படும்‌ ஒந்த அரசு, சமூகத்தின்‌ விளிம்பு நிலையில்‌ உள்ள அடித்தட்டு மக்கள்‌ அனைவரும்‌ சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டினை அடைவதற்காக பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவர் களுக்கான புதிய விடுதிக்‌ கட்டடங்கள்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைத்தல்‌, உண்டு உறைவிடப்‌ பள்ளிகளை மேம்படுத்துதல்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகள்‌ 425.40 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம்‌ முழுவதும்‌ வீடின்றி வசித்துவரும்‌ அழிவின்‌ விளிம்பில்‌ உள்ள பழங்குடியினருக்கு 1,537 வீடுகள்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. வனங்களில்‌ வசிக்கும்‌ பழங்குடியின மக்களின்‌ உரிமைகளை உறுதிசெய்யும்‌ பொருட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில்‌ வன உரிமைச்‌ சட்டம்‌ 2006ன்‌ கீழ்‌ 2,293 பழங்குடியின குடும்பங்களுக்கு வன உரிமைகள்‌ வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்‌ சமூகநீதியை நிலைநாட்டி, சமூகத்தில்‌ பின்தங்கியுள்ள மக்களின்‌ முன்னேற்றத்தினை உறுதி செய்யும்‌ வகையில்‌. சிறப்பான இட ஒதுக்கீட்டு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. பொருளாதாரத்தில்‌ பின்‌ தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம்‌ இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதிக்‌ கொள்கைக்கு எதிராக உள்ளதால்‌, தற்போது நமது மாநிலத்தில்‌ பின்பற்றப்படும்‌ இடஒதுக்கீட்டு முறையே தொடரும்‌ என்ற கொள்கைக்‌ கோட்பாட்டில்‌ இந்த அரசு உறுதியாக உள்ளது.

சமூகத்தில்‌ பின்தங்கியுள்ளோரின்‌ பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌, தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, 210 கோடி ரூபாய்‌ அளவிற்கு கடன்கள்‌ வழங்குவதற்கு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்ணை இமை காப்பது போல்‌ சிறுபான்மையினரின்‌ உரிமைகளையும்‌, நலன்களையும்‌ பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. ஹஜ்‌ மற்றும்‌ ஜெருசலேமிற்கு புனிதப்‌ பயணம்‌ மேற்கொள்ளும்‌ பயணிகளுக்கு மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.

சமூகத்தில்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ நிலையை மேம்படுத்துவதை இந்த அரசு நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. மாற்றுத்‌ திறனாளிகள்‌ பெறும்‌ மாதாந்திர ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும்‌, தங்களைத்‌ தாங்களே பராமரித்துக்கொள்ள (இயலாத மாற்றுத்‌ திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும்‌ உயர்த்த முதலமைச்சர்‌ ஆணையிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆண்டொன்றிற்கு 888 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. இதனால்‌ மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள 6.45 லட்சம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ பயன்‌ பெறுவார்கள்‌.

அரசுப்‌ பணியாளர்களின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு, சுமார்‌ 16 லட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌, குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, இந்த அரசு 1.1.2023 முதல்‌ அகவிலைப்படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால்‌ ஆண்டொன்நிற்கு அரசிற்கு 2,359 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள்‌ சான்றிதழ்‌ வழங்கும்‌ முறை மின்னணு முறையில்‌ எளிமையாக்கப்பட்டு, ஓய்வூதியதாரர்கள்‌ இருக்கும்‌ இடத்திலிருந்தே இச்சேவையைப்‌ பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது