ஜனாதிபதி திரவுபதி முர்மு விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். ரேணிகுண்டாவில் இருந்து காரில் புறப்பட்டு திருப்பதி வழியாக திருமலையை அடைந்தார். திருமலைக்கு வந்த ஜனாதிபதியை திருமலை -திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி நரசிம்மகிஷோர் மற்றும் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 9.25 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரதான நுழைவு வாயிலில் ஜனாதிபதிக்கு தேவஸ்தானத்தின் உயரிய வரவேற்பான, ‘இஸ்தி கப்பல்’ வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி மூலவர் ஏழுமலையான், வகுளமாதா சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி உள்பட பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தங்கக் கொடி மரத்தை வலம் வந்து வணங்கினார். கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், 2023-ம் ஆண்டுக்கான டைரி, காலண்டர், உலர் மலர் தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட சாமி படம் ஆகியவற்றை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி வழங்கினார். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
கோவிலில் இருந்து பத்மாவதி விருந்தினர் மாளிக்கைக்கு வந்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் அலிபிரிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள கோசாலையில் நடந்த கோமந்திர பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து பசுக்களுக்கு வெல்லம், தீவனம், பழம் ஆகியவற்றை வழங்கி, அங்குள்ள வேணுகோபாலசாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து அலிபிரியில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.