Take a fresh look at your lifestyle.

திருச்சியில் ரூ. 547 கோடியில் 11,586 திட்டங்கள்: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

72

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 1 கோடி பேர் பலனடைந்துள்ளதாக முதல்வர் கூறினார்.

திருச்சியில் இன்று நடந்த பல்வேறு அரசு விழாக்களில் முதலமைச்சர் பங்கேற்றார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.238.41 கோடி செலவில் 5635 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.308.29 கோடி மதிப் பீட்டி லான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 22,716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படவுள்ள நிகழ்வில், திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களை முதல்வர் வழங்கினார். மேலும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கி யிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய புதிய துறை களில் முதலீடுகளை இன்றைக்கு நாம் ஈர்த்து வருகிறோம். மணப்பாறையில் சிப்காட் திறப்பு விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தினை அதாவது ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியைச் சந்திக்க சன்னாசிப்பட்டி என்ற கிராமத்திற்கு நான் செல்ல இருக்கிறேன்.

நம்முடைய கழக ஆட்சி அமைந்ததும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சரோஜா என்பவர்தான் இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதலாவது நபர். இன்று நான் சந்திக்க இருப்பவர் ஒரு கோடியாவது நபர்! இந்த ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நமது அரசாங்கம் இத்தகைய சிகிச்சையை அளித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல; மாரத்தான் போல் நெடிய தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்துள்ள சாதனை! இந்த மேடைக்குப் புதியவராக, அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி. அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர, உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது, ‘என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பிறகு விமர்சியுங்கள்’ என்றார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோதும் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி, அனைவரது பாராட்டையும் பெற்றார், தன்னை நிரூபித்துக் காட்டினார். உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன்கள் ஆகிய முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஏழை எளிய, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள்! இவைதான் அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி இந்தத் துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு, மணிமேகலை விருது, மாநில அளவிலான வங்கியாளர் விருது, முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் – என ஆறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது! இந்த விழாவில், 22 ஆயிரத்து 716 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு 79 கோடியே 6 லட்சம் ரூபாய். இன்று மட்டும் 5,635 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். இவற்றின் மொத்த மதிப்பு 238 கோடியே 40 லட்சம் ரூபாய். 5951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 308 கோடியே 29 லட்சம் ரூபாய்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், 625 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயன்கள் திருச்சி மாவட்டத்திற்கு அளிக்கும் மாபெரும் விழாதான் இந்த விழா. அதனால்தான் நான் தொடக்கத்திலே சொன்னேன், திருச்சியில் எது நடந்தாலும் அது பிரமாண்டமான வகையில்தான் நடைபெறும் என்று சொன்னேன். இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, நம் மாநில இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், அதாவது 21.-4.-2022 அன்று சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்திருந்தேன்.

அந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏழை எளிய, அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித்தரும் ஆட்சியாக நம்முடைய கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதில் சமூகத்தின் சரிபாதியான மகளிர் சமுதாயத்திற்காக தனியாக சிறப்புத் திட்டங்களை வகுப்பதில் கழக அரசு அமையும் போதெல்லாம் முனைப்பாக இருந்து வந்திருக்கிறது. மகளிர் சுய உதவிக்களுக்கான கடன்கள் வழங்கும் விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை, இங்கே தம்பி உதயநிதி பேசுகிறபோது சொன்னாரே, 1989-ம் ஆண்டு முதன்முதலில் தருமபுரி மாவட்டத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தவர் நம்முடைய தலைவர் தான்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகமான கடன்கள் வழங்கப்பட்டது. கடன் பெற்ற மகளிரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அவர்களுடைய குடும்பம் முன்னேறியது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, கடந்தகால ஆட்சியாளர்கள் அதனை முறையாகச் செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தில், மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்த அமைப்பு எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை நாம் அறியலாம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்திடவும், வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக கடன் வழங்க முதன்முதலில் முனைப்பு காட்டியது தி.மு.க. அரசு தான்.

சுய உதவிக் குழுக்களுக்கு 2021- 22-ம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை விட அதிகமாகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 சுய உதவிக்குழுக்கள் பெற்றிருக்கிறார்கள். 2022- 23 நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 16.12.2022 வரை, 2 லட்சத்து 60 ஆயிரத்து 589 குழுக்களுக்கு 14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை அரசாங்கத்தின் கடமையாகவும் பொறுப்பாகவும் நாங்கள் நினைக்கிறோம். அதேபோல், மிகச்சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ‘மணிமேகலை விருது’ தரப்படும் என்று கலைஞர் 2007-ம் ஆண்டு அறிவித்தார். மகளிர் அமைப்புகளுக்கு மணிமேகலை விருதானது மிகப் பெரிய ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்தது. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதை கடந்தகால ஆட்சியில் என்ன செய்தார்கள்? அதை நிறுத்தி வைத்து விட்டார்கள், அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மணிமேகலை விருது மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு 33 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 55 லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது.

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிக வங்கிக்கடன்களை வழங்குவதற்காக வங்கியாளர்களை ஊக்குவிப்பதோடு, சிறப்பாக செயல்படும் வங்கிகள் மற்றும் கிளைகளுக்கான வங்கியாளர் விருதுகள் 2008- 2009-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டு காலமாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக வழங்கப்படாமல் இருந்த மாநில அளவிலான வங்கியாளர்களுக்கான விருதினை 2021 -22-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளது. அவற்றையும் 8 வங்கிகளுக்கு இன்றைக்கு நாம் வழங்குகிறோம்.

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட இன்று பொருளாதாரத் தன்னிறைவைப் பெற்று, வளமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை உங்கள் அனைவரின் முகங்களையும் காணும்போது நான் இங்கே உணருகிறேன். இன்றைய நாள் இங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டதைப் போல தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்கக்கூடிய வகையில், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

தமிழர்களையும் தமிழ்நாட்டையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்! அதனை தொய்வில்லாமல் செய்து வருகிறோம். அதனைத் தடங்கல் இல்லாமல் இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். யார், எத்தகைய விமர்சனம் வைத்தாலும் திராவிட மாடல் கொள்கையில் இருந்து வழுவாத ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக வைத்து, இந்த ஆட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் நாம் இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியின் வேகத்தை நீங்கள் அறியலாம்.

தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக வளர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பொறுத்தவரைக்கும், உலகப் புகழோடு நாம் அதை நடத்திக் காட்டி இருக்கிறோம். எவ்வளவு மழை வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, அதனைத் தாங்கும் அளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தந்திருப்பதும் நம்முடைய அரசுதான்!

புயல் வந்தது, அதிகப்படியான மழையும் பெய்தது. அது வந்ததா, வரவில்லையா என்று தெரியாத அளவிற்கு அரசு பணியாற்றி இருக்கிறது. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் பணியாற்றவில்லை. மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் – அவர்களது மனது நிறைந்தால் போதும். இதனைத்தான் ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் அண்ணா. நான் சொல்வது, “ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும் கலைஞரையும் காண்போம்” என்பது தான் என்னுடைய கொள்கை.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, இந்த மகளிர் சுய உதவிக்குழுவினுடைய துறையை என் கைவசம் வைத்திருந்தேன். இன்றைக்கு தம்பி உதயநிதி கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்காக தம்பி உதயநிதியை நான் உங்கள் அனைவரின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் அதற்காக பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும், அதற்குரிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.