Take a fresh look at your lifestyle.

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் மனு

72

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

தமிழக கவர்னரை இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினார். கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது,

‘‘அண்ணா தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி. எனவே தமிழ்நாட்டில் நடக்கும் மோசமான சம்பவங்களை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இன்று கவர்னரை நேரில் சந்தித்தேன். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அவரிடம் எடுத்து சொன்னேன். குறிப்பாக விடியா தி.மு.க. அரசு ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்று 18 மாதம் ஆகிறது. இந்த 18 மாத தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் கொடுமை நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அன்றாடம் இதுபோன்ற நிகழ்வுகள் தான் பத்திரிகைகளில் வருகின்றன. திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இருப்பதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

23.10.2022 அன்று கோவையில் காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பவம் நடைபெற்றது. மத்திய உளவுத்துறை ஏஜென்சி இதுகுறித்து 18 ந் தேதி அன்றே மாநில அரசுக்கு தகவல் தெரிவித்தது. தீவிரவாத செயல் நடக்கும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான விடியா தி.மு.க. அரசின் உளவுத்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசின் எச்சரிக்கையை கடைப்பிடிக்காததால் கோவை உக்கடம் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை குறித்து கவனமாக இருந்திருந்தால் இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இருக்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருந்தால் அதிக உயிர் இழப்பு நடைபெற்று இருக்கும்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்து பெற்றோர் தகவல் சொன்ன உடனேயே விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் அங்கு வன்முறை, தீ வைப்பு சம்பவம் நடைபெற்று இருக்காது. இந்த சம்பவத்திற்கு முழுப்பொறுப்பும் ஸ்டாலின் தான் ஏற்கவேண்டும்.

போதைப்பொருள் நடமாட்டத்தை இந்த அரசு தடுக்க முடியவில்லை. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு டன் கணக்கில் போதைப் பொருட்கள் வருகிறது. ஆனால் அதனை கண்டுபிடித்து கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர்களும், இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி எல்லாம் பத்திரிகைகளில், சட்டசபையில் நான் பேசினேன். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழ்நாட்டில் தங்குதடையின்றி போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இதனை தடுக்க அரசு தவறி விட்டது. எனவே உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் சொன்னேன்.

விடியா தி.மு.க. ஆட்சியில் எல்லா துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் ஆகிய மூன்றும் தான் இந்த அரசின் தாரக மந்திரம். திராவிட மாடல் என்றால் இது தான். எல்லா துறையிலும் லஞ்சம் தான். லஞ்சம் இல்லாத துறையே இல்லை. இதனையும் கவர்னரிடம் எடுத்து சொன்னோம்.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் எல்லா மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் இருந்தன. தரமான மருந்துகளை கொடுத்தோம். ஆனால் இன்று அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. நாய் கடிக்கு கூட மருந்து இல்லை என்று சொல்கிறார்கள். அண்ணா தி.மு.க. ஆட்சியில் அரசே மருந்து கழகம் மூலம் தரமான மருந்துகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்து தங்குதடையின்றி அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொடுத்தோம்.

ஆனால் இன்று அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் திறமையற்ற அரசு தான். முறையான டெண்டர் போடவில்லை. மருத்துவமனை டீன் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரே மருந்துகளை கொள்முதல் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் பாழாகி உள்ளது. மருந்து கொள்முதலிலும் ஊழல் நடந்துள்ளது.

உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியை வழங்குகிறது. அந்த நிதியை வைத்து உள்ளாட்சி பணிகள் நடக்கும். அந்த உரிமையை பறிக்கும் வகையில் இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதாவது உள்ளாட்சிகளில் செலவு செய்த நிதியில் மீதி இருக்கும் நிதியை உடனடியாக உள்ளாட்சி துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டு இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நேரடியாக அனுப்பும் பணத்தை மறைமுகமாக தி.மு.க. அரசு பெறுகிறது. உள்ளாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சிகளில் முடிவுற்ற பணிகள் குறித்து விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக பேனர் ஒன்று தயார் செய்கிறார்கள். அந்த பேனருக்கு ரூ.350 தான். ஆனால் அதற்கு ரூ.7,900 கொடுத்து இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரே கம்பெனிக்கு இந்த ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். இதில் மெகா ஊழல் நடைபெற்று இருக்கிறது. (அந்த பேனரை நிருபர்களிடம் எடப்பாடி காட்டினார். அந்த பேனருக்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்களே பாருங்கள்) இதுபற்றி எல்லாம் கவர்னரிடம் கொடுத்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன்.

பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டதும் பணிகளை செய்யாமலேயே பணத்தை தந்து இருக்கிறார்கள். இதில் பெரும் ஊழல் நடந்து இருக்கிறது. ஒரு சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிகாரமற்றவர்களின் ஆணையின் பேரிலேயே இதை எல்லாம் நடைபெற்று இருக்கிறது. 24 மணி நேரம் டாஸ்மாக் பார் நடைபெறுகிறது. சட்ட விரோதமாக பார்களை திறந்து வைத்து இருக்கிறார்கள். டெண்டர்கள் விடாமல் பார் நடைபெறுகிறது. மதுபான உற்பத்தி செய்யும் இடங்களில் கலால் வரி செலுத்தாமலேயே மதுபானம் தரப்படுகிறது. இதில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மதுபானத்தில் மிகப்பெரிய மெகா ஊழல் நடைபெற்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து இருக்கிறது. நிறைய இடத்தில் பார் எடுத்திருக்கிறார்கள். 2 மாதம் மட்டும் பணத்தை கட்டிவிட்டு சட்டவிரோமாக பார் நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் வலியுறுத்தினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கவர்னரின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது

கவர்னரின் செயல்பாடு குறித்து நிருபர்கள் கேட்ட போது எடப்பாடி கூறியதாவது, ‘‘மிகவும் நன்றாக இருக்கிறது. எதிர்க்கட்சி என்கிற முறையில் நாங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவோம். அதன் அடிப்படையில் தான் நாங்கள் இன்று கவர்னரிடம் மனு அளித்து உள்ளோம். நாங்கள் பிரதான எதிர்க்கட்சி. எனவே இந்த ஆட்சியின் அட்டுழியங்கள் ஊழல்கள் பற்றி கவர்னரிடம் கொடுத்து இருக்கிறோம். அவர் விசாரிக்க வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. நான் உங்களை எல்லாம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தை காப்பாற்றுங்கள். உண்மை சம்பவங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வாருங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். கவர்னரை எடப்பாடி சந்தித்தபோது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.