Take a fresh look at your lifestyle.

திமுக ஆட்சியை அகற்ற சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

62

தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “அண்ணா மற்றும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். நம்மை பாராட்டக் கூடியவர்கள், வாழ்த்தக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தவர்கள், அந்த மாநிலங்களின் தலைவர்கள் நம்மை வாழ்த்திக் கொண்டு உள்ளனர். கடல் கடந்து வாழ்பவர்களும் ஆட்சியின் சாதனைகளைப் பார்த்து பாராட்டி கொண்டுள்ளனர்.

ஆனால், நாட்டை பிளவு படுத்த வேண்டும் என்று உலவிக் கொண்டு இருக்கும் சிலர், இந்த ஆட்சி திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை கவரக் கூடிய வகையில் ஆட்சி செய்து கொண்டு உள்ளதால், தொடர்ந்து ஆட்சியை விட்டால், நம்முடைய பிழைப்பு என்ன ஆவது என்று நினைத்து புழுதி வாரி தூற்றிக் கொண்டு உள்ளார்கள். இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு உள்ளார்கள்.

கலவரத்தை ஏற்படுத்தலாமா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டலாமா, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தலாமா என்று திட்டமிட்டு அந்த காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.என்னை பொறுத்தவரையில் நம்மீது சொல்லப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் மூலமாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் அந்தப் பிரச்சாரத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதற்கு பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பான கூட்டணியை நாம் அமைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து, தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்பின் தேர்தலாக இருந்தாலும் சரி, அதேபோல் அண்மையில் நடந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே வெற்றியைத் தொடங்கி, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். எனவே இதை அவர்களாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அதே நேரத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில், நான் 1 ம் தேதி நந்தனத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது, பல்வேறு மாநிலத்தின் தலைவர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. – கூட்டணி சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுகிறோம்.

நமக்குள் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கௌரவம் எல்லாம் பார்க்காமல், நாம் ஒற்றுமையாக இருந்து ஈடுபட வேண்டும்“ என்று வேண்டுகோளைத் தான் நான் எடுத்து வைத்தேன். அதைத்தான் நான் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயமாக இன்றைக்கு நாம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாக சொன்னேன்.

உங்களிள் ஒத்துழைப்புடன் பணியை தொடர போகிறேன். நீங்கள் உங்களின் கடமையை ஆற்றுங்கள். தலைவர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தால் மட்டும் போதாது. கருணாநிதி எதற்குப் பாடுபட்டாரோ, எதற்கு பணியாற்றினாரோ, எதற்காக உழைத்தாரோ, என்ன லட்சியத்தை நமக்கு கற்றுக் கொடுத்தாரோ, அதை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் அந்தப் பணியை நிறைவேற்றினால்தான், அந்த சிலையைத் திறந்து வைத்ததற்கு உள்ளபடியே நாம் மரியாதை செலுத்துவதாக அமைந்திட முடியும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.