Take a fresh look at your lifestyle.

திமுகவின் ஆட்சிக் காலம் எப்போதுமே தமிழாட்சி காலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

75

தி.மு.க. ஆட்சி காலம் எப்போதும் தமிழாட்சி காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6 ந் தேதி) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக த்தில், சென்னை இலக்கியத் திருவிழா -2023 தொடங்கி வைத்து, பேசினார். அவர் பேசிய தாவது: தி.மு.க.-வின் ஆட்சிக்காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம் தான். தமிழ் நாட்டில் தி.மு.க. என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெ டுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, அமெரிக்காவில் உள்ள ஊஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி. நெல்லையில் பொருநை விழா-, தஞ்சையில் காவிரி விழா-, கோவையில் சிறுவாணி விழா, மதுரையில் வைகை விழா என நடத்தப்பட்டு தலைநகரில் தலைசிறந்த விழாவாக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தலைசிறந்த படைப்பாளிகள் இங்கு உரையாற்ற இருக்கிறீர்கள். இந்த 5 விழாக்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டுத் தமிழ் மாநாடு போல இதனைச் சொல்லலாம். இத்தகைய விழாவில் 100 நூல்களை நான் உங்களின் அன்போடு, ஆதரவோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்காக ஒரு விழா என்று இல்லாமல் – 100 புத்தகங்களை வெளியிடும் ஒரு விழாவாக இந்த விழா மிகமிக பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்து தமிழ் திசை சார்பில் வெளியிட்டப்பட்ட மாபெரும் தமிழ்க் கனவு என்ற பேரறிஞர் அண்ணா குறித்த நூலை மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க – இங்கே வெளியிடப்பட்டுள்ளது. ராபர்ட் ஹார்ட்கிரேவ் என்ற அமெரிக்க ஆய்வாளர் திராவிட இயக்கம் குறித்து ஆங்கிலத்தில் 1965- ம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதி னார். திமுக முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் அது. அந்த நூலை அனுமதி பெற்று நாம் வெளியிட்டு இருக்கிறோம். பேராசிரியர் அன்பழகனை சிறப்பிக்கும் வகையிலான தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. பத்துப்பாட்டு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. கலைக்களஞ்சியமானது ஆவணப்பதிப்பாக வெளியாகி இருக்கிறது. மருத்துவ நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தமிழின் பெருமையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களாக அமைந்துள்ளன. 49 ஆண்டுகளுக்கு முன்பு 1974 ம் ஆண்டு ஜனவரி 16 ம் நாள் அன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் 176 கல்லூரி பாட நூல்களை வெளியிட்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

“தமிழைப் படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தமிழைப் படிப்பது என்பது சங்ககால இலக்கியங்களை, காவியங்களை, கவிதைகளை நம் பழங்கால பனுவல்களை படிப்பது, தமிழைப் படிப்பது தேவை. தமிழில் படிப்பது என்பது வரலாறு படிப்பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப்பது, பல்துறைகளைப் படிப்பது, தமிழைப் படிப்பது தேவை. அதைவிட தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. தமிழ்நாட்டில் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் அது தேவை என்று தமிழ்மொழியில் அறிவுச் செல்வம் பெருகவேண்டியதைப் பற்றி உரையாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எது என்று கேட்டால் இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மொழி என்பது ஒரு இனத்தின் உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுக தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும், மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது-‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் – என்பதை விட தன்னம்பிக்கை வரி உலகத்தில் உண்டா? இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நாம் நடத்தப் போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன. இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக் காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாறவேண்டும்.

இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய விழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல, கூடிப் படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழா சிறப்பிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள், தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை இலக்கிய திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத்திட்டம் பிரிவில் 29 புத்தகங்களும், இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் 36 புத்தகங்களும், சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு 10 புத்தகங்கள் உள்பட 100 நூல்கள் வெளியிடப்பட்டன.

சென்னை இலக்கியத் திருவிழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கஜலட்சுமி, பொது நூலக இயக்குநர் க. இளம்பகவத், பிரபல எழுத்தாளர்கள் பால் சக்காரியா, பவா செல்லத்துரை, பொது நூலத்தினுடைய இயக்கக இணை இயக்குநர் அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.