திட்டக்குடி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கார் மீது பின்னால் வந்த லாரி மற்றும் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன் அவரது மனைவி வத்சலா, அம்மா வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத் உள்ளிட்ட 5 பேரும் 2 தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு கடலூர் மாவட்டம் திட்டக் குடியை அடுத்த ஐயனார்பாளையம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சாலையில் கார் மெதுவாக சென்றது. அப்போது பின்னால் வந்த மணல் லாரி காரின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதனால் 2 லாரிகளுக்கும் இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறு ங்கியது. மேலும் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் தொடர்ந்து மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீஸார் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.