Take a fresh look at your lifestyle.

தாம்பரம் மாநகர போலீஸ் எல்லையில் போலி வெளிநாட்டு சிகரட் விற்ற 17 பேர் கைது

72

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் போலி வெளிநாட்டு சிகரெட்டு விற்பனை செய்த 17 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைகளில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை நடப்பதாக கமிஷனர் அமல் ராஜுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் மூர்த்தி மற்றும் உதவிக்கமிஷனர்கள் ராபர்ட் ராஜா, வெங்கடேசன் தலைமையில் 4 இன்ஸ் பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தனிப் படை யினர் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, தாழம்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 37 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 17 கடைகளில் இருந்து 41 வகையான வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 720 சிகரட்டு பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். 17 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிகரட் பாக்கெட்டுகள் எங்கிருந்து யார் மூலம் அனுப்பப்படுகிறது என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு கமிஷனர் அமல்ராஜ் அறிவுரை:

‘‘கல்லுாரி, பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் போதை மற்றும் சிகரட் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் பெற்றோரையும் மனத்துயரத்திற்கு ஆளாக்குகின்றனர். அவ்வாறான தீய செயல்களில் ஈடுபடாமல் மாணவர்கள் நல்வழியில் சென்று, உடலையும், மனதையும் பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் இச்சமுதாயத்தையும் பாதுகாக்கவேண்டும். பெற்றோர்களும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்’’ என கமிஷனர் அமல்ராஜ் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை கூறியுள்ளார்.