தனியார் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டியதாக சென்னை தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் திமுக தாம்பரம் மாநகர செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளவும், தான் யார் என்று உனக்கு தெரியுமா? என்று கோபத்தோடு பேசியுள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது தொடர்பாக அந்த தனியார் நிறுவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி எம்எல்ஏ ராஜா மீது 294 பி (தரக்குறைவாக பேசுதல்), 447 (அத்துமீறி நுழைதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.