தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கிறது: ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கிய தால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் ஆகியோரின் இல்ல திருமணம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு வரவேற்பு விழா ஈரோடு அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் குட்டிமணி என்கிற ஜெ.கோவேந்தன்- ம.ராஜநந்தினி ஆகியோருக்கு மலர் மாலை எடுத்துக்கொடுத்து, மாலை மாற்றச்செய்து வாழ்த்தினார். இந்த விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘இது சீர்திருத்த திருமணம். சீர்திருத்த திருமணங்கள் நடைபெற தொடங்கிய காலத்தில் இதை கேலி, கிண்டல் செய்தவர்கள், கொச்சைப்படுத்தி பேசியவர்கள் இருந்தனர். 1967-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக அண்ணா இருந்தபோது, சீர்திருத்த திருமணத்தை சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார். எனவே இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்கள் நடைபெறவில்லை என்றால்தான் ஆச்சரியம். இது பெரியார் பிறந்த மண். கருணாநிதியின் குருகுலம். இங்கு அவருக்கு 3 சிலைகள் உள்ளன. அது 300 ஆக உயரும்.
எப்படி நாம் ஆட்சிக்கு வந்து மழை தொடர்ந்து பெய்து உழவர்களுக்கும், மக்களுக்கும், வேளாண்மைக்கும் பாதிப்பில்லாமல், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் ஒரு சுபிட்சமான நிலையை நாட்டில் உருவாக்கி இருக்கிறதோ, அதே நிலையில், இந்த ஆட்சி தொடர்ந்து தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று மக்களிடத்திலே எடுத்துச் சொன்னோமோ, அதை விடப் பல மடங்கு சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்த ஆட்சிக்குப் பக்கபலமாக நீங்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்ற இந்த அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.