Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை: அண்ணாமலை அறிவிப்பு

102

தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விரைவில் சொத்து பட்டியலை வெளியி டுவேன். அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ‘வாட்ச்’ குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப் பட்ட ரூ.5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்ச் ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்து என சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

நான் தமிழக பாரதீய ஜனதா தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்த னைகள், ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்கு சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே தமிழக மக்களை சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க.வினர் வெளியிட தயாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.