தமிழ்நாடு உணவுக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 88 லட்சம் மோசடி: தனியார் சட்டக்கல்லூரி பேராசிரியர் உள்பட இருவர் கைது
உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 88 மோசடி செய்த தனியார் சட்டக்கல்லூரி பேராசிரியர் உள்பட இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவர் உள்பட 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் ரூ. 88 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக
தெரிவித்திருந்தார். ரூ. 88 லட்சத்தை வங்கிக் கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு
கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து சட்டக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் வடபழனி, கருணிகர் தெருவைச் சேர்ந்த சாந்தி (வயது 45) மற்றும் செங்கல்பட்டு
பக்தவச்சலம் (43) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 17 நபர்களிடமிருந்து ரூ. 88 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளனர்.
பொதுமக்கள் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்குவதில்லை. வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண
பரிமாற்றம் செய்ய வேண்டாம். வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்ககூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.