விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அருணாசலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். அத்துடன் தொடர்ச்சியாக 5 சதம் அடித்தும் வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-அருணாசலபிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த அருணாசலபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் களம் இறங்கினர். இருவரும் தடாலடியாக மட்டையை சுழற்றி ரன் மழை பொழிந்தனர்.
தொடர்ந்து ரன்வேட்டை நடத்தி மலைக்க வைத்த இவர்கள் ஸ்கோர் 416 ரன்களாக உயர்ந்த போது தான் பிரிந்தனர். சாய் சுதர்சன் 154 ரன்னில் (102 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) டோரியா பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 114 பந்துகளில் இரட்டை சதத்தை கடந்து மிரள வைத்த ஜெகதீசன் 277 ரன்கள் ( 141 பந்து, 25 பவுண்டரி, 15 சிக்சர்) குவித்து 42-வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 506 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
லிஸ்ட் ‘ஏ’ வகை கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச மற்றும் உள்ளூர் ஒருநாள் போட்டிகள் சேர்ந்து) ஒரு அணி 500 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடக்க விக்கெட்டுக்கு சாய் சுதர்சன்-ஜெகதீசன் இணை 416 ரன்கள் எடுத்ததும் புதிய சாதனையாக பதிவானது. லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் எந்தவொரு ஜோடியும் இதற்கு முன்பு 400 ரன்களை தொட்டது கிடையாது. 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல்-மார்லோன் சாமுவேல்ஸ் இணை 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.
பின்னர் அடிய அருணாசலபிரதேச அணி 28.4 ஓவர்களில் 71 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழக அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. லிஸ்ட் ஏ போட்டியில் ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.
ஜெகதீசன் உலக சாதனைகள்
இந்த போட்டியில் 25 பவுண்டரி, 15 சிக்சருடன் 277 ரன்கள் குவித்த கோவையைச் சேர்ந்த 26 வயதான என். ஜெகதீசன் பல்வேறு உலக சாதனைகளை தகர்த்தார். அதன் விவரம் வருமாறு:-
* லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை என்.ஜெகதீசன் (277 ரன்கள்) தனதாக்கினார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் அலிஸ்டைர் பிரவுன் 268 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது. அந்த 20 ஆண்டு கால சாதனையை ஜெகதீசன் முறியடித்தார். இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரையும் ஜெகதீசன் முந்தினார்.
* இந்த தொடரில் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5-வது சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் லிஸ்ட் ஏ போட்டியில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன்பு இலங்கையின் சங்கக்கரா (2014- 15), தென்ஆப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன் (2015- 16), இந்தியாவின் தேவ்தத் படிக்கல் (2020- 21) ஆகியோர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
* இரட்டை சதம் விளாசிய ஜெகதீசன் அதற்கு முன்பாக அரியானா (128 ரன்), கோவா (168 ரன்), சத்தீஷ்கார் (107 ரன்), ஆந்திரா (114 ரன்) ஆகிய அணிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து சதம் அடித்திருந்தார். விஜய் ஹசாரே கோப்பை தொடர் ஒன்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சிறப்பும் அவர் வசம் ஆனது. இதற்கு முன்பு விராட்கோலி (2008- 09), தேவ்தத் படிக்கல் (2020- 21), பிரித்வி ஷா (2020- 21), ருதுராஜ் கெய்க்வாட் (2021-22) ஆகியோர் 4 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.