Take a fresh look at your lifestyle.

தமிழக வீரர் சரத் கமலுக்கு கேல்ரத்னா விருது: ஜனாதிபதி வழங்கினார்

76

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல்ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். மேலும் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, இளவேனில், அனிகா உள்பட 25 பேருக்கு அர்ஜூனா விருதுகளையும் அவர் வழங்கினார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் வீரர்களின் செயல்பாடு விருதுக்கு தகுதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இதில் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார். 40 வயதான சரத் கமல் கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 3 தங்கம், ஒரு வெள்ளி என்று மொத்தம் 4 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார்.

இதே போல் சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பேட்மிண்டனில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்று அசத்திய மதுரை லேடி டோக் கல்லூரியில் படிக்கும் 18 வயது வீராங்கனை ஜெர்லின் அனிகா, கடலூரை பூர்விகமாக கொண்ட குஜராத்தில் வசிக்கும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் உள்பட 25 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வானார்கள்.

இவர்களுக்கான விருது வழங்கும் விழா உள்ள டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி பாராட்டினார். அவரிடம் இருந்து கேல் ரத்னா விருதை பெற்றுக் கொண்ட சரத் கமலுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதே போல் அர்ஜூனா விருதுக்கு ரூ.15 லட்சமும், துரோணாச்சார்யா விருதுக்கு இரு பிரிவுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வீதமும், தயான்சந்த் விருதுக்கு ரூ.10 லட்சமும் அளிக்கப்பட்டது.

விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சரத் கமல் கூறுகையில், ‘காமன்வெல்த் விளையாட்டில் 4 பதக்கம் வென்று, இறுதியில் கேல்ரத்னா விருதோடு இந்த ஆண்டை நிறைவு செய்வது அற்புதமானது. 30 ஆண்டுகள் விளையாட்டில் இருக்கும் எனக்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் அந்த அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

விருது பெற்ற வீரர், வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

கேல்ரத்னா விருது: சரத் கமல் (டேபிள் டென்னிஸ்).

அர்ஜூனா விருது:

சீமா பூனியா, எல்தோஸ் பால், அவினாஷ் சாப்ளே (3 பேரும் தடகளம்), லக்‌ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் (இருவரும் பேட்மிண்டன்), அமித், நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பிரக்ஞானந்தா, பாக்தி குல்கர்னி (செஸ்), தீப் கிரேஸ் எக்கா (ஆக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்‌ஷி குமாரி (கபடி), நயன் மோனி சாய்கியா (லான் பவுல்), சாகர் கைலாஸ் ஒவல்கர் (மல்லர்கம்பம்), இளவேனில், ஓம்பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்குர் (பளுதூக்குதல்), அன்ஷூ, சரிதா (இருவரும் மல்யுத்தம்), பர்வீன் (வுசூ), மனாசி கிரிஸ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான் (இருவரும் பாராபேட்மிண்டன்), ஸ்வப்னில் சஞ்சய் பட்டீல் (பாரா நீச்சல்), ஜெர்லின் அனிகா (காதுகேளாதோர் பேட்மிண்டன்).

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது (வழக்கமான பிரிவு): ஜிவான்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமார் (குத்துச்சண்டை), சுமார் சித்தார்த் ஷிருர் (பாரா துப்பாக்கி சுடுதல்), சுஜீத் மான் (மல்யுத்தம்).

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் பிரிவு): தினேஷ் ஜவஹர் லாட் (கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் பயிற்சியாளர்), பிமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து), ராஜ் சிங் (மல்யுத்தம்).

வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது: அஷ்வினி அக்குஞ்ச் (தடகளம்), தரம்விர்சிங் (ஆக்கி), சுரேஷ்(கபடி), நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்.