தமிழக காவல்துறையில் மூத்த டிஜிபிக்களான முகமது ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஆகியோர் நாளையுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். இருவருக்கும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.
தமிழக காவல்துறையில் மூத்த டிஜிபிக்களாக பதவி வகித்து வருபவர்கள் முகமது ஷகில் அக்தர் மற்றும் சுனில்குமார் சிங். 1989ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகில் அக்தர் தமிழக சிபிசிஐடி டிஜிபியாகவும், 1988ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் ஆன சுனில்குமார்சிங் சிறைத்துறை டிஜிபியாகவும் உயர்ந்த பதவியில் உள்ளனர்.
இவர்களுக்கான பிரிவு உபசார விழா திங்கள் கிழமை மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது.
முகமது ஷகில் அக்தர்
தமிழக காவல்துறையில் டிஜிபி ஷகில் அக்தர் தனது துணிச்சலான காவல் பணியால் தனக்கென தனக்கென தனி முத்திரை பதித்தவர். பீகார் மாநிலம் சண்டிகாரைச் சேர்ந்த இவர் 1989ம் ஆண்டு தர்மபுரியில் ஏ.எஸ்.பி.யாக தனது காவல் பணியை தொடங்கினார். தமிழக சிறப்பு காவல் படை கமாண்டண்ட், சிவகங்கை எஸ்.பி., ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக ஷகில் அக்தர் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர். மேலும் சென்னை நகர போக்குவரத்து வடக்கு துணை ஆணையர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு பணி, இந்திய உள்நாட்டு விவகார அமைச்சரின் தனி செயலாளர், ரவுடிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி, நிர்வாகப் பிரிவு ஐஜி, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர், தலைமையிட ஐஜி, தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபி, சிறப்பு காவல்படை கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.
மேலும் ஷகில் அக்தர் பூக்கடை துணைக்கமிஷனராக இருந்த போது அப்போது விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் திருட்டு விசிடிக்களை பர்மாபஜாரில் அதிரடி ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் வடசென்னையை கலக்கிய ரவுடிகள் வெள்ளை ரவி, சேரா ஆகியோரை கைது செய்து அவர்களின் கொட்டத்தை அடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த போது ரேசன் அரிசியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்திய குற்றவாளிகளை கண்டறிந்தது, 2002 ஆம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்த போது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதியான இமாம் அலி உட்பட 5 பேரை பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்தது போன்ற மெச்சத்தகுந்த காவல் பணிகளால் பாராட்டு மற்றும் 3 முறை ஜனாதிபதி பதக்கங்கள் பெற்றவர்.
அந்த என்கவுண்டருக்கு பிறகு தீவிரவாதிகள் மிரட்டல் இருந்ததால் ஷகீல் அக்தருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் மு.க. அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது அவருக்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக டெல்லியில் ஷகில் அக்தர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
சுனில்குமார் சிங்
டிஜிபி சுனில்குமார் சிங் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். எம்ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் முதுகலை பட்டதாரியான இவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக காவல் பணிக்கு ஐபிஎஸ் அதிகாரியாக 1989ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள், சேலம் நகர போலீஸ் கமிஷனராக 3 ஆண்டுகள், சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனராக 1 ஆண்டு, சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக 4 ஆண்டுகள், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக 2 1/2 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர். அதன் பிறகு கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சிறைத்துறை தலைவராக சுனில்குமார் சிங் நியமிக்கப்பட்டார்.