தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் வண்ணக்கொடி – முதல்வரிடம் வழங்கினார் வெங்கய்யாநாயுடு
Hon`ble Vice President gave Presidents colors to TN Police 31.07.2022
இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யாநாயுடு தமிழக காவல் துறைக்கு கிடைத்துள்ள உயரிய விருதான ’’குடியரசு தலைவர் வண்ணக் கொடியை’’ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி சிறப்பித்தார்.
இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக சீர்மிகு சேவையாற்றும் முப்படைகள், துணை ராணுவப்படைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை கவுரவிக்கும் விதமாக இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் கடந்த 1951ம் ஆண்டு இந்திய கப்பல் படைக்கு ‘‘குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை” (President’s Colours) வழங்கி கவுரவித்தார்.
இதுவரையில், இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக சீர்மிகு முறையில் சிறப்பாக பணியாற்றிய 9 மாநிலங்களுக்கு குடியரசு தலைவர் வண்ணக் கொடி வழங்கப்பட்டுள்ளது. இந்லையில், தற்போது, இந்த உயரிய விருதான குடியரசு தலைவரின் வண்ணக்கொடி தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் இந்தியாவிலேயே முதலாவதாக குடியரசு தலைவர் வண்ணக்கொடியை பெறும் காவல்துறை என்ற சிறப்பும் பெருமையும் தமிழ்நாடு காவல்துறைக்கு கிடைத்துள்ளது.
அதன் பேரில், நேற்று (31.07.2022) காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வசம் தமிழக காவல்துறைக்கான ’’குடியரசுத் தலைவரின் கொடி (President’s Colours)’’ யினை வழங்கினார். அந்த கொடியினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் வழங்கி வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு குடியரசு தலைவர் வண்ணக் கொடியின் சின்னத்தை (Logo) தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்.
மேலும் தமிழக காவல் துறையின் இத்தகைய சிறப்பை போற்றும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு சிறப்பித்தார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், இத்தகைய சிறப்பை பெற்ற தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் முதல் காவலர் வரை வரை அனைவருக்கும் தமிழக அரசின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று நற்செய்தியை அறிவித்தார்.
குடியரசு தலைவர் கொடியின் சின்னம் (logo), தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் முதல் காவலர் வரையிலான அனைவரும் தங்களது சீருடையில் அணிந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு உயரதிகாரிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் மற்றும் உயரதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.