தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்வுகளில், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். கவர்னரின் இந்த பேச்சுக்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக முதல்வருக்கு வழங்கி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், கவர்னர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த அக்.23ம் தேதியன்று நடந்த கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை வழக்கை என்ஐஏவுக்கு வழங்கியதில் ஏன் இந்த கால தாமதம்? என்று பேசியிருந்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் என்ன குறை கண்டார் ஆளுநர்? என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட கவர்னர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ள நிலையில், கவர்னரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.