Take a fresh look at your lifestyle.

தமிழகம் முழுவதும் 726 பிச்சைக்காரர்கள் மீட்பு: ஆபரேஷன் மறுவாழ்வு அதிரடி நடவடிக்கை

72

ஆபரேஷன் மறுவாழ்வு அதிரடி நடவடிக்கையின் கீழ் தமிழகம் முழுவதும் 726 பிச்சைக் காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

‘‘தமிழ்நாட்டில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச் சாலை சுங்க சாவடி களிலும் பெண்களையும், சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்தத் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆபரேஷன் மறுவாழ்வு” என்ற அதிரடி நடவடிக்கை நேற்று முதல் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரக காவல் எல்லைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள், மறுவாழ்வு இல்லத்திற்கும், குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர். 150 நபர்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏழைப்பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகர்களுக்கு, வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் குற்றவாளிகள் பற்றிய தகவல் 044 – 28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்’’. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.