Take a fresh look at your lifestyle.

தமிழகம் முழுவதும் 280 இடங்களில் நடந்த குரூப்- 2 தேர்வில் குளறுபடி

63

தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதிய வர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்காக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகிறார்கள். அவர்களில் 27 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 27 ஆயிரத்து 764 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். குரூப் 2 மெயின் தேர்வு இன்று தாள் 1 காலையிலும் தாள் 2 மாலையிலும் நடத்தப்படுகிறது.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடந்தது. இதையொட்டி தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையத்திற்குள் வந்தனர். கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து தேர்வு எழுதுபவர்களுக்கு வினியோகம் செய்த முயன்ற போது வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னை, கடலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தேர்வு தொடங்க 30 நிமிடத்திற்கும் மேலாக தாமதமானதால் தேர்வர்கள் அவதியடைந்த நிலையில், எவ்வளவு நேரம் தாமதப்படுத்தப்பட்டதோ அவ்வளவு கூடுதல் நேரமாக வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில், காலையில் தேர்வு தாமதமாகத் தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண் களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும்’’ என்று அறிவிக்கப்பட்டது.