எம்.ஜி.ஆர். 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 19ந் தேதி முதல் 22ந் தேதி வரை நடைபெறுகிறது.
அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அண்ணா தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 19ந் தேதி முதல் 22ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கட்சியின் அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.