Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னையில் 4 நாட்களுக்கு கனமழை

125

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் 14 ந்தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நகாப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (12 ந்தேதி) நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நகாப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 12 ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.