தமிழகத்தில் புதிதாக 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அது தொடர்பாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள், 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரியலூர் பெரியாத்து குறிச்சி, செங்கல்பட்டு பொன்மார், கோவை மணியக்காரன் பாளையம், கடலூர் ஒரங்கூர், மஞ்சக் கொல்லை, தர்மபுரி அதிகப்பாடி, ஈரோடு பவானி சாகர், மூலப்பாளையம், கள்ளம்குறிச்சி கீழப்பாடி, காஞ்சிபுரம் தேரியம்பாக்கம், கரூர் வி.வி.ஜி.நகர், மதுரை ஆரப்பாளையம், மயிலாடுதுறை வடகரை, சேலம் தாத்தம்பட்டி, தூத்துக்குடி சிவஞானபுரம், திருவாரூர் கொரடாச்சேரி, நெல்லை உதயத்தூர், மேலப்பாளையம், வேலூர் காட்பாடி, கன்னியாகுமரி பெருவிளை உள்ளிட்ட இடங்களில் 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
சுகாதார நிலையங்களை அமைக்க செலவாகும் ரூ.120 கோடியில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் நிதி ஒதுக்கும். மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவ பணியாளர்களை கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் செயல்படுத்தப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். கடந்த 6 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் புதிதாக தொடங்கப்படவில்லை. தீபாவளியையொட்டி அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காயப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பி்ரமணியன் கூறினார்.