தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் க. பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப் பட்டது. மேலும் போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து தப்பித்து வந்த போதைப் பொருள் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.