Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

42

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாற்றுவதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தொடக்கவிழா சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. சுற்றுச்சூழல், பருவகால மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வரவேற்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சீர்மிகு காலநிலை கிராமங்கள், பசுமை பள்ளிகள், பசுமை நினைவுச்சின்னங்கள் ஆகிய திட்டங்களை தொடங்கிவைத்து காலநிலை மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். அதன்பின்பு காலநிலை மாற்ற இயக்கத்தின் ஆவணங்களை வெளியிட்டார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. அதைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. இன்றைக்கு ஐ.நா. அமைப்பாக இருந்தாலும் – உலகின் பல நாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சி னையைப் பற்றிதான் அனை வரது கவலையும்! அதுதான் காலநிலை மாற்றம்! மானுடத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் என்பது இருக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசும் மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது என்பதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தை துவக்கி வைத்துள்ளேன்.

அதிகமான வெயில், அதிகமான மழை, காலம் தவறிப்பெய்யும் மழை, மழை பெய்யாமலே போவது, அதிகப் படியான வெப்பம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புதிய புதிய நோய்கள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மண்வளம் குறைதல், காற்று மாசுபடுதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாவதை பார்த்து வருகிறோம். வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன. இந்தியா வரும் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டிவிடும் என கிளாஸ் கோவில் நடந்த மாநாட்டில் பிரதமர் அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது. கடந்த ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

* துறையின் பெயரை “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று அறிவித்தோம்.
* தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம்.
* நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்.
* தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் நான் துவக்கி வைத்தேன்.
* இதுவரை சுமார் 2.8 கோடி மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

* பொதுவாகவே வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையை, பருவங்களை கணிப்பது கடினம். இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் “காலநிலை ஸ்டூடியோ” ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
* ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மை யுடைய கிராமங்களாக மாற்றுவதற்கு திட்டம் இன்று துவக்கப்படுகிறது.
* காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில் முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க “காலநிலை அறிவு இயக்கத்தை” தமிழகத்தில் செயல்படுத்தப் போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
* கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பல்லுயிரியத்தைப் பாதுகாப்பதை இந்த அரசினுடைய முக்கியமான கடமையாகக் கருதுகிறோம். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13 ஆக உயர்த்தியுள்ளோம்.
* அருகிவரும் உயிரினங்களான கடல்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
* இந்த அனைத்துத் திட்டங்களை யும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக “Tamil Nadu Green Climate Company” உருவாக்கப்பட்டு இவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான குறியீடாக “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் ஒருங்கி ணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, “காலநிலை மாற்ற நிர்வாகக் குழு” எனது தலைமை யில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கி ணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட் டுள்ளார்கள்.

இந்நிலையில் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறேன்.

*”பசுமைத் திட்டங்களுக்கான” அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில், தொழில்துறையில் உள்ள Guidance TN- ல் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த முடிவு 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
* புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.
* காற்றாலைகளைப் புதுப்பிப்பதற் கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும்.
* அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்தவிருக்கிறோம்.
* தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் Green Climate Fund – பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

* காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி – தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை! இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070- ம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவரும், பொருளாதார நிபுணருமான மான்டேக் சிங் அலுவாலியா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம், மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் செய்யத் முஜம்மில் அப்பாஸ், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் திட்ட இயக்குனர் தீபக் பில்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.