உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று 3 வது நாளாக கூட்டம் தொடங்கியது. அப்போது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி கேட்டார். அதற்கு இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டசபையில் பதிலளிக்க எழுந்தபோது தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் 1500 பார்வை யாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும். அதேபோல் திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஏப்ரலில் திறக்கப்படும் என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே வந்து திருப்பூரில் அமைக்கப்படும் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை திறந்து வைக்கவேண்டும் என்று உறுப்பினர் செல்வராஜ் கேட்டுக்கொண்டார். உறுப்பினர் செல்வராஜ் கோரிக்கையை ஏற்று நானே வந்து திறந்து வைக்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
தொடர்ந்து உறுப்பினரின் துணைக் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், “உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கபடிப்போட்டி வரும் ஜூன் மாதம் நடத்தப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டி களை உள்ளடக்கிய ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்று பதில் அளித்தார்.