இறைத்துாதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 18வது தலைமுறையில் முத்தாக வந்துதித்த செய்யிது அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 512 (கி.பி. 1107) ரஜபு பிறை 27–ல் ஈராக் நாட்டில், பசரா என்ற ஊரில் தோன்றினார்கள். பெற்றோர் சையத்அலி அபுல் ஹசன் – பாத்திமா அல் அன்சாரி. தனது உடல் பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்த அவர்கள் கி.பி. 1183ம் ஆண்டு, ஹிஜ்ரி 578, ஜமாத்துல் அவ்வல் பிறை 22ல் இப்பூலகை விட்டு மறைந்தார்கள்.
ரிபாஈ நாயகம் இவ்வுலகில் நிகழ்த்திய அதிசயங்கள் இதோ…
ரிபாஈ (ரழி) ஆண்டவர்கள் தமது 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்ததால், தாய் மாமனார் மன்சூர் ரப்பானி (ரழி) அவர்களிடம் வளர்ந்தார்கள். 8 வயதிலேயே ரிபாஈ நாயகம் குர்ஆன் முழுவதையும் கற்றறிந்தார்கள். அதன் பொருள் அர்த்தம் புரிந்து நடந்தார்கள். சிறு வயதிலேயே கராமத்துக்கள் (அதிசயங்கள்) பலவற்றை செய்து காட்டி ரிபாஈ (ரழி) நாயகம் அவர்கள் அகமியம் அறிந்த தலைவரானார்கள். மன்சூர் ரப்பானி (ரழி) தனக்குப் பிறகு தனது கிலாபத் என்னும் ஆன்மிக குருத்துவப் பட்டத்தை தனது, தங்கை மகனான மருமகனான திருமகனார், ரிபாஈ நாயகம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் மன்சூர் ரப்பானியின் மனைவியார் கிலாபத்தை தாங்கள் பெற்ற வாரிசுக்கு வழங்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்கள். திருமகனார் அஹ்மது கபீர் ரிபாஈக்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது என்று மன்சூர் ரப்பானி கூறவே, அவர்களது மனைவி தனது மகனுக்கே கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
இதனால் மன்சூர் ரப்பானி அவர்கள் இருவருக்கும் மூன்று பரிட்சைகள் நடத்துவோம். அதன் முடிவில் யாருக்கு கிலாபத் சூட்டுவது என்ற முடிவுக்கு வருவோம் என தெரிவித்தார்கள். அதன்படி மருமகனார் ரிபாஈ நாயகத்தையும், தனது மகனாரையும் மன்சூர் ரப்பானி (ரழி) அவர்கள் அழைத்தார்கள். இருவரிடமும் கத்தியைக் கொடுத்து ஜன நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து அங்கு மேயும் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியையும், பாகங்களையும் வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது. ரிபாஈ நாயகமும், மன்சூர் ரப்பானியின் மகனாரும் கத்தியுடன் காட்டுக்கு புறப்பட்டார்கள். மன்சூர் ரப்பானியின் மகனார் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனாந்திரப்பகுதிக்கு சென்று அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த ஆட்டை பிடித்து அறுத்து தந்தையார் சொன்னது போல அதன் இறைச்சியையும், உடல்பாகங்களையும் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். அடுத்த சில மணி நேரங்களில் ரிபாஈ நாயகம் வெறும் கையுடன் திரும்பினார்கள். அவர்களிடம் ஏன் ஆடு ஒன்றும் கிடைக்கவில்லையா? நான் சொன்னபடி செய்யாதது ஏன் என்று மாமனார் மன்சூர் ரப்பானி கேட்டார்கள். அதற்கு எம்பெருமான் ரிபாஈ நாயகம், ‘‘நான் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. நான் காணும் இடமெல்லாம் என் கண்களுக்கு அல்லாஹ்வே தெரிந்தான்’’ என்றார்கள்.
அதனைக் கேட்டதும் ஆச்சரியமடைந்த மன்சூர் ரப்பானி அடுத்த பரிட்சைக்கு தயாரானார்கள். இருவரிடமும் மீன் பிடிக்கும் வலையும், கூடையும் கொடுத்தனுப்பி அதனை, நீர் நிலையில் வீசி சமைப்பதற்கு சுவையான மீன்களை பிடித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். அதன்படியே ரிபாஈ நாயகமும், மன்சூர் ரப்பானியின் மகனாரும் மீன் வலை, கூடையுடன் சென்றனர். சிறிது நேரத்தில் மன்சூர் ரப்பானியின் மகனார் கூடை நிறைய மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். இம்முறையும் ரிபாஈ நாயகம் வெறும் கையுடனேயே திரும்பினார்கள். அது குறித்து மன்சூர் ரப்பானி கேட்ட போது, ‘‘மீன் பிடிக்க சென்றேன். அப்போது தண்ணீருக்கு மேல்பகுதிக்கு வந்த மீன்கள் அனைத்தும் அல்லாஹ்வை ‘திக்ர்’ செய்தபடி இருந்தன. அவற்றை நான் வலை வீசி பிடித்தால் அதன் திக்ர் கலைந்து போய் விடுமே என்பதால் நான் மீன்களை பிடிக்கவில்லை’’ என பதிலளித்தார்கள். இதனைக் கேட்டு மன்சூர் ரப்பானியும் அவரது மனைவியும் நெகிழ்ந்தார்கள்.
மூன்றாவது தேர்வையும் நடத்தி விட முடிவு செய்த மன்சூர் ரப்பானி ரிபாஈ நாயகம், தனது மகனிடம் இரண்டு புல் அறுக்கும் கத்திகளை கொடுத்து வயல் வெளிக்கு சென்று புல் அறுத்து வரும்படி கட்டளையிட்டார்கள். இப்போதும் மன்சூர் ரப்பானியின் மகனார் புற்களை அறுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். வெறும் கையை வீசியபடி வந்த ரிபாஈ நாயகம் கூறியதைக் கேட்ட மன்சூர் ரப்பானி எனது மருமகன் ரிபாஈக்குத்தான் கிலாபத் என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள்.
ரிபாஈ நாயகம் சொன்னது, ‘‘ புல் அறுக்க சென்றேன். அந்த புற்கள் அனைத்தும் அல்லாஹ்வை மிகுந்த உருக்கத்துடன் துதி செய்தபடி இருந்தன. அதனால் நான் அவற்றை அறுக்கவில்லை’’ என தெரிவித்தார்கள். ரிபாஈ நாயகத்திற்கு தமது எட்டாம் வயதிலேயே இத்தகைய இறைஞானம் ஏற்பட்டுள்ளதை தனது மனைவிக்கு ஆதாரத்துடன் காட்டியதும் அவரும் மனம் உவந்து நமது மகனை விட, ரிபாஈதான் தங்களிடம் கிலாபத் பெற தகுதியானவர்கள் என்று அவருக்கே குருத்துவப்பட்டத்தை கொடுக்க மனம் உவந்து ஏற்றுக் கொண்டார்கள். இந்த சம்பவத்தை மேலப்பாளையம் கலீபா அஹ்மதுல்லாஷா அவர்கள் தங்களது ரிபாஈ நாயகம் புகழ்மாலை பாட்டில் எழுதி இயற்றியுள்ளார்கள். அத்தகைய ரிபாஈ நாயகத்தின் ஒப்பில்லா இறைஞானம் நம் எல்லோருக்கும் கிட்ட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
செய்யது ஆஷிக்குல்லாஷா கலீபா ரிபாஈ