தனியார் விடுதியில் அடித்து துன்புறுத்தியதாக மீட்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 12 சிறார்களை போலீசார் மீட்டு சொந்த மாநிலத்துக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.
சென்னை, மாதவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இலவசக் கல்வி என் பெயரில் குழந்தைகளை அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக குழந்தைகள் நல வாரியத்தில் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது. கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, கொளத்தூர் துணைக்கமிஷனர் ராஜாராம் மேற் பார்வையில் மாதவரம் போலீசார் அங்கு கடந்த மாதம் 29ம் தேதியன்று சென்று விசார ணை நடத்தினர். ஆய்வு நடத்தியதில் பீகாரைச் சேர்ந்த ஆதரவற்ற 12 குழந்தைகள் அங்கு இருப்பதும் அவர்களை அடித்து துன்புறுத்துவதும் தெரியவந்தது. 12 குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார் காப்பகத்தின் நிர்வாகிகள் பீகாரைச் சார்ந்த அக்தர், அப்து ல்லா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவர்கள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று ராயபுரம் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறார்கள் மிகவும் ஏழ்மையான பின்னனியில் இருந்து வந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு மார்க்க கல்வி கற்பிக்க பெற்றோரின் சம்மதத்துடன் அழைத்து வரப்பட்டதாக தெரிய வந்தது. அதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பு ஆதரவுடன் குழந்தைகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் நேற்று 12 குழந்தைகளும் பெரம்பூரில் இருந்து ரயில் மூலம் பீகாருக்கு சென்றனர். மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நேரில் சென்று கொளத்தூர் காவல் மாவட்டம் சார்பாக கைக்கடிகாரம் தோல்பைகள், ஆடைகள் பயணத்தின் போது பயன்படுத்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினார். இந்தச் சம்பவத்தில் சென்னை பெருநகர காவல் துறையின் நடவடிக்கையால் தேசிய மனித உரிமை ஆணையம் மிகவும் திருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.