தனது சீட்டில் எஸ்ஐயின் 4 வயது பேரனை அமர வைத்து அழகு பார்த்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்
avadi police commissioner sandeep rai rathore aplas 4 years child
தனது சீட்டில் எஸ்ஐயின் 4 வயது மகனை அமர வைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அழகு பார்த்த நிகழ்ச்சி காவல்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் புதிதாக தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரேட்டுக்களை உருவாக்கி தமிழக அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆவடி முதல் போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ஒரு கூடுதல் கமிஷனர் மேற்பார்வையில் ஆவடி போலீஸ் கமிஷனரேட் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆவடி கமிஷனரேட் எல்லைக்குள் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய 6 சப்- – இன்ஸ்பெக்டர்கள் பணி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணி நிறைவு விழா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
செங்குன்றம் சட்டம் -ஒழுங்கு காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி ஓய்வு பெற்ற சேரலாதன் தனது குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருடன் 4 வயது பேரன் பிரணவ் சாயும் வந்திருந்தான். சிறுவன் பிரணன் போலீஸ் சீருடை, தொப்பி அணிந்து கம்பீரமாக இருந்தது விழாவுக்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை கவனித்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறுவன் பிரணவ் சாயை அருகில் அழைத்து போலீஸ் உடை அணிந்து வந்தது பற்றி விசாரித்தார். ‘‘நானும் உங்களைப் போல் கமிஷனராக வேண்டும். போலீஸ் வேலை பிடிக்கும்’ என்றான். இதனால் உற்சாகம் அடைந்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், சிறுவன் பிரணவ்வை தனது இரண்டு கைகளால் தூக்கிச் சென்று தனது கமிஷனர் இருக்கையில் அமரவைத்தார். காக்கி சீருடை, தொப்பியுடன் கம்பீரமாக கமிஷனர் இருக்கையில் இருந்த சிறுவன் பிரணவ் சாய்க்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. இதைத்தொடர்ந்து கமிஷனர் இருக்கையில் அமர்ந்து இருந்த பேரனுடன் ஓய்வு பெற்ற சேரலாதன் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் சிறுவன் பிரணவ் சாயின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். இந்தக் காட்சி விழாவில் பங்கேற்றவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் இந்த செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். சிறுவன் பிரணவ் போலீஸ் கமிஷனர் சீட்டில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.