Take a fresh look at your lifestyle.

தஞ்சாவூர் கோவிலில் திருடப்பட்ட பார்வதி ஐம்பொன் சிலை அமெரிக்கா ஏல இல்லத்தில் கண்டுபிடிப்பு * தமிழகம் கொண்டு வருவதற்கு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை

parvathi idols taced in america newyork city

69

சென்னை, ஆக. 8–

தஞ்சாவூர் நடனபுரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்கா ஏல இல்லத்தில் இருப்பதை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை விரைவில் சென்னைக்கு கொண்டு வர தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தாண்டந்தோட்டம் நடன புரீஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள பார்வதி அம்மன் மற்றும் கோலு அம்மன் சிலைகள் உட்பட ஐந்து ஐம்பொன் சிலைகளும் திருடு போனதாக கடந்த 13.5.1971 அன்று நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அந்த 5 சிலைகளின் புகைப்படங்கள் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தில் உள்ளதும் தெரியவந்தது. 46 ஆண்டுகளாகியும் இந்த சிலைத்திருட்டு தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கடந்த 2019ம் ஆண்டு சமூக ஆர்வலர் வாசு என்பவர் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த சிலைகள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக எந்த துப்பும் துலங்கவில்லை.

இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி தினகரன், எஸ்பி ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். திருடப்பட்ட ஐந்து சிலைகளும் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சியின் போது நடனபுரீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவத்தைப் பெற்றது ஆகும். அதனையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீசார் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில் உள்ள சோழர் கால பார்வதி சிலைகளை தேடத் தொடங்கினர். முழுமையான தேடலுக்குப் பிறகு அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல வீட்டில் 52 செ.மீட்டர் உயரம் உடைய பார்வதி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பாண்டிச்சேரியில் உள்ள இந்திய -பிரான்ஸ் கல்வி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அங்கு புகைப்படத்தில் உள்ள பார்வதி சிலையும் நியூயார்க் ஏல இலத்தில் உள்ள சிலையும் ஒரே சிலைதான் என்பதை மாநில தொல்லியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளார். ஆகவே அந்த சிலைகள் தஞ்சாவூர் கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டுக்கு பலகோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரின் விசாரணையில் உறுதியாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.