தஞ்சாவூரில் காணாமல் போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் தொடர் அதிரடி நடவடிக்கை
missing bible traced in london idol wing action
17 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் நூலகத்தில் திருடு போன 307 ஆண்டுகள் பழமையான பைபிள் லண்டனைச் சேர்ந்த அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை தமிழகம் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
தென்னிந்தியாவின் சிறந்த கிறித்தவ மதபோதகராக இருந்தவர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் 1706ம் ஆண்டு இந்தியா வந்தார். தஞ்சாவூரில் ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும் இவர் பைபிளின் “புதிய அத்தியாயத்தை” தமிழில் 1715ம் ஆண்டு மொழி பெயர்த்தார்.
1719ம் ஆண்டு இவர் மறைந்தார். சீகன் பால்க்கால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட அந்த அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. விலை மதிப்பில்லாத இந்த பைபிள் காணாமல் போனதாக கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த புராதானமான பைபிள் களவு போனது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வக்கீல் யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிலைக்கடத்தல் தனிப்படையினர் அந்த அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை பார்வையிட்ட போது சில வெளிநாட்டினர் கடந்த 2005ம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றதும், ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வருகை தந்ததும் சீகன் பால்க் சம்மந்தப்பட்ட இடங்களையும் தொண்டாற்றிய நிறுவனங்களையும் பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்கள் மூலம் ஆராய்ச்சி செய்ததில் அந்த பைபிள் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்சன் என்ற லண்டனில் ஒரு நிறுவனத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அது லண்டனுக்கு சென்றது எப்படி என்ற புலனாய்வில் அந்த பைபிள் சரஸ்வதி மகால் நூலகம் அருங் காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன், எஸ்பி ரவி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.