மெல்போர்ன்
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும், பாகிஸ்தானும் இறுதிசுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 80 ஆயிரத்து 462 ரசிகர்கள் ஆட்டத்தை பார்க்க குவிந்தனர்.
‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முகமது ரிஸ்வானும், கேப்டன் பாபர் அசாமும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். நிதானமாக ஆடிய இவர்கள் 4-வது ஓவரில் தான் பந்தை எல்லைக்கோடு பக்கமே ஓட விட்டனர். அதிரடி காட்ட ஆரம்பித்த சமயத்தில் முகமது ரிஸ்வான் (15 ரன்) வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரனின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து இறங்கிய முகமது ஹாரிஸ் (8 ரன்), பாபர் அசாம் (32 ரன், 28 பந்து, 2 பவுண்டரி) இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் காலி செய்ததுடன் மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் ரன்வேகத்துக்கும் முட்டுக்கட்டை போட்டார். இப்திகர் அகமதுவும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. 85 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (12.2 ஓவர்) இழந்து தள்ளாடிய பாகிஸ்தானை தூக்கி நிறுத்த முயற்சித்த ஷான் மசூத் (38 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷதப் கான் (20 ரன்) இருவரும் முக்கியமான கட்டத்தில் வீழ்ந்தனர்.
கடைசி பகுதியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீசி பாகிஸ்தானை முற்றிலும் கட்டுப்படுத்தினர். கடைசி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது.
நடப்பு தொடரில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து எடுத்த குறைந்த ஸ்கோர் இது தான். இங்கிலாந்து தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 15 பந்துகளில் அவர் ரன்னே (டாட்பால்) விட்டுக்கொடுக்காமல் பிரமாதப்படுத்தினார். 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு பவுலரின் 3-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
பின்னர் 138 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறியது. வேகத்துடன் பவுன்சும் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்றாக ‘ஸ்விங்’ செய்து கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹாலெஸ் (1 ரன்), பில் சால்ட் (10 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லர் (26 ரன், 17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் 45 ரன்னுக்குள் (5.3 ஓவர்) நடையை கட்டினர். இதனால் உத்வேகம் அடைந்த பாகிஸ்தான் பவுலர்கள் தொடர்ந்து சரியான அளவில் பந்தை ‘பிட்ச்’ செய்து மிரட்டினர்.
ஆனாலும் ரன்தேவை குறைவாக இருந்ததால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவசரம்காட்டாமல் பக்குவமாக விளையாடினர். 4-வது வரிசையில் இறங்கிய ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்து வந்தார். 20 ரன்னில் இருந்த போது, ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். அவருக்கு ஹாரி புரூக் (20 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். அதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்சுடன், மொயீன் அலி கைகோர்த்தார்.
கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 41 ரன் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் பந்தை வீசியதுடன் வெளியேறியது பாகிஸ்தானுக்கு சிக்கலை உருவாக்கியது. இதையடுத்து எஞ்சிய 5 பந்துகளை சுழற்பந்து வீச்சாளர் இப்திகர் அகமது போட்டார். அவரது பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ் பவுண்டரி, சிக்சர் விளாசி நெருக்கடியை சற்று தணித்தார். முகமது வாசிமின் அடுத்த ஓவரில் மொயீன் அலி 3 பவுண்டரி விரட்ட, பாகிஸ்தானின் நம்பிக்கை சுக்குநூறானது. ஆட்டம் முழுமையாக இங்கிலாந்து பக்கம் திரும்பியது. மொயீன் அலி 19 ரன்னில் (13 பந்து) போல்டு ஆனார்.
தொடர்ந்து தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ் 6 பந்து மீதம் வைத்து வெற்றிக்குரிய ரன்னை எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடனும் (49 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), லிவிங்ஸ்டன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக பெற்றுள்ளது.. ஏற்கனவே 2010-ம் ஆண்டு பால் காலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து கோப்பையை வென்றிருந்தது.