Take a fresh look at your lifestyle.

டில்லியில் குடியரசு தினம் கோலாகலம்

36

நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமைப் பாதையில் (முன்னர் ராஜபாதை) நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர் ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவத்தினரும் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடமை பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமை பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதி க்கு வருகை தந்தார். ஜனாதிபதி மாளிகையில் இருந்து விழாவிற்குப் புறப்பட்டு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை வரவேற்றார். பின்னர், டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த ஜனாதிபதி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பில் முதலில் எகிப்திய ஆயுதப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுத்துச் சென்றது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் எகிப்து ஆயுதப்படையின் முக்கியப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தக் குழுவை கர்னல் முகமது முகமது அப்தல் பதா எல் கராசாவி வழி நடத்தினார்.

நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து நாட்டின் அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை ’என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா பேரணி இன்று நடைபெற்றது.

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன டிரோன்கள், ரபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசம் நடைபெற்றது. கடமை பாதையில் ஆயுதப் படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வந்தன.

நாட்டின் கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாது காப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், 6 ஊர்திகள் பல்வேறு அமைச்ச கங்கள் மற்றும் துறைகளின் சார்பில் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றன. இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நடன, கலை, இசை நிகழ்ச்சிகளுக்கும் இடம் பெற்றன.