சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஜிபி சைலேந்திரபாபு நேரடி மேற்பார்வையில் மெரீனா உயிர்காக்கும் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
இந்த பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்கள் தங்கள் பணியினை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமக் காவல்துறை ஏடிஜிபி சந்திப் மித்தல் ஆகியோர் முன்னிலையில் ஒத்திகை செய்து காண்பித்தனர். அந்த ஒத்திகையின் போது காவலர்கள் எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிப்பதை தடுப்பது, பலர் கடல் நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கடல் அலையில் சிக்கியவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்கள் Life Bouy – மற்றும் Rescue tube மூலம் மீட்பது எப்படி என்று செய்து காண்பித்தனர். மேலும் கடலின் ஆழப் பகுதியில் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது கடலின் நீரோட்டத்தில் மாட்டிக் கொள்ளும் போது அவர்களை Stand up paddaling மூலம் எப்படி மீட்பது, மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பும் போது மோட்டார் இஞ்சின் பழுதாகி விட்டால் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அவரச உதவி எண் 1093 எண்ணிற்கு கைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தவுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிநவீன படகு ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்து 12- Tonne அதிவிரைவு படகு மூலம் விரைந்து சென்று பழுதான படகை கட்டி பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவருவதும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
அதே போன்று, மீனவர்கள் பைபர் கட்டுமரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து கடல் நீரில் தத்தளிக்கின்றனர். அவர்களை ஜெட்ஸ்கி மூலம் காப்பாற்றுவது, கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டு காணாமல் போன நபரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் கடலில் மூழ்கி மீட்பது (Scuba diving), பள்ளி மாணவர்கள் உற்சாக மிகுதியில் கடலில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவர் அலையில் சிக்கிக் கொண்டால் ரோந்து பணியிலிருந்த காவலரால் கடலோர பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டறை 1093 தகவல் கொடுக்கப்பட்டதும் அங்கிருந்து இந்த தகவல் Maritime Rescue Co-ordination Centre -க்கு தெரிவிக்கப்பட்டதும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடி மீட்பது, குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்தவர்களில் ஒருவர், கடல் அலையில் சிக்கி சுயநினைவு இழந்தவரை மீட்டு முதலுதவி அளிப்பதும் மெரினா உயிர் காக்கும் பிரிவு காவலர்களார் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பிரிவு துவங்கப்படுவதற்கு முன்னர் கடலில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகள் அதிகமாக இருந்தது. இந்த உயிர் காப்புப் பிரிவு துவங்கப்பட்ட பின்பு கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு இறப்பு நிகழ்வு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின் போது கடலோர பாதுகாப்பு குழுமக் காவல் துறை துணைத் தலைவர் முனைவர் சின்னசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் குணசேகரன், தீயணைப்புத்துறை டெபுடி டைரக்டர் ப்ரியா மற்றும் காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.