Take a fresh look at your lifestyle.

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு ஆய்வு கூட்டம்:

58

சென்னை, செப். 15–

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு ஆய்வுக்கூட்டம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட சிலைகளை ஒவ்வொன்றாக மீட்டு தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைப்பற்றப் பட்ட கோவில் சிலைகளை அந்தந்தக் கோவில்களில் ஒப்படைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. சிலைகள் பல, கடந்த சில நாட்களில் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பதுக்கப்பட்ட சிலைகளை மீட்க செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும், முக்கிய சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது தொடர்பாகவும், விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பழமை வாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வருவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சிலைகளை தமிழகம் கொண்டு வருவதற்கான தனிப்படைகள் அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.