டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
dgp sylendrababu review tamil nadu police law and order activities
கடந்த ஐந்து மாதங்களில் தமிழக காவல்துறையின் செயல்பாடு எவ்வாறு உள்ளது, சட்டம் – ஒழுங்கு, குற்றங்கள் தொடர்பாக மண்டல ஐஜிக்களுடன் டிஜிபி சைலேந்திரபாபு நாளை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த வாரம் முடிந்துள்ள நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு செயல்பாடு எப்படி உள்ளது, குற்றவாளிகள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, குற்றங்கள் எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது உள்பட இன்னும் பல்வேறு வகையான காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் வரும்படி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் கமிஷனரேட்டுக்கள்ல் நான்கு மண்டலத்திலும் உள்ள ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள் இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு வரும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணியளவில் நடைபபெறும் இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடம் செய்யப்படும் ஆய்வு தொடர்பாக அது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:–
* கடந்த ஐந்து மாதங்களில் ரவுடிகள் அவர்களது கூட்டாளிகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள், கைது செய்யப்பட்ட ரவுடிகள், தலைமறைவாக உள்ள ரவுடிகள் குறித்த விவரங்கள் வைத்திருத்தல் வேண்டும்.
* கடந்த காலாண்டில் நடந்த முக்கிய குற்ற நிகழ்வுகள், கண்டுபிடிக்கப்பட்டவை, மீட்கப்பட்ட சொத்துக்கள் விவரங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள்.
* சாலை விபத்துக்களை குறைப்பது மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான திட்ட விவரங்கள்
* புலனாய்வு திறன் மற்றும் சரக அளவில் பயிற்சிகள் தொடர்பான விவரங்ககள்
* மாவட்டம் மற்றும் கமிஷனரேட்டுக்களில் சைபர்கிரைம் பிரிவின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள்
* கடந்த ஐந்து மாதங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்ட புகார் மனுக்களின் விவரம்.
* காவல்துறையின் வருகைப்பதிவேடு மற்றும் காவலர்களின் குறைகள் களைந்தது தொடர்பான விவரங்கள்
இவ்வாறு அந்த உத்தரவில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு மண்டல ஐஜிக்கள் மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், கோவை, திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் கமிஷனர்களுக்கும் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.