ஜி20 மாநாடு பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி டெல்லி சென்றனர்
ஜி 20 மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, கனமொழி, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
ஜி 20 உச்சி மாநாடு பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர். ‘ஜி 20’ என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் ஒரு அமைப்பின்கீழ் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பின் தலைமைப்பொறுப்புக்கு இந்தியா கடந்த 1ந் தேதி வந்துள்ளது. இந்த அமைப்பு, உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்கு வகிப்பதாலும், உலக வர்த்தகத்தில் 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதாலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருப்பதாலும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந் தேதியும், 10ந் தேதியும் 2 நாட்கள் நடைபெறுகின்றன. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதுதான் இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டையொட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத், ஐதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்துவதற்கு மத்திய அரசு உத்தேசித்துள்ளது. ‘ஜி 20’ தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி அதன் முக்கிய கூட்டமான ‘ஷெர்பா’ கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது. வங்காளதேசம், எகிப்து, மொரீசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டம் 4 நாட்கள் நடக்கிறது.
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ‘ஜி 20’ உச்சி மாநாட்டில் தாக்கல் செய்யப் படும் பிரகடனத்தில் சேர்ப்பதற்கான பல்வேறு விஷயங்களை முடிவு செய் வதிலும், முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும் ‘ஷெர்பா’ கூட்டங்கள் கவனம் செலுத்தும். இந்நிலையில், ‘ஜி 20’ உச்சி மாநாடு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெறவும், விவாதங்கள் நடத்தவும், மாநாட்டு க்கான உத்திகளை இறுதி செய்யவும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் நடக்கிறது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாட்டில் உள்ள 40 முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டார். இந்த அழைப்பை ஏற்று, அவர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதற்காக நேற்று காலை 10 மணி அளவில் அவர் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பகல் 12.30 மணி அளவில் டெல்லி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து அவர் தமிழ்நாடு இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.