ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ. 11,185 கோடியை தமிழகத்திற்கு உடனே வழங்குங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடான ரூ.11 ஆயிரத்து 185 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 2023- 24-ம் ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான (பட்ஜெட்) முந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- செஸ் வரி மற்றும் மிகுவரி (செஸ், சர்சார்ஜ்) போன்ற வரிகளை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவது, நிதிக் கூட்டாட்சி முறைக்கு முரணாக உள்ளது. வரிப் பகிர்வில் இவை மாநிலங்களுக்கு பயனளிக்காததால், மாநில அரசுகளின் நிதி ஆதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 10.4 சதவீதத்தில் இருந்து 26.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வசூலிக்கும் இந்த வரிகளில் மாநில அரசு தனது பங்கை பெற முடியவில்லை. எனவே இந்த 2 வரிகளையும் அடிப்படை வரி மதிப்புடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் தங்களின் சட்ட ரீதியான பங்கைப் பெற முடியும்.
மத்திய அரசு அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி. வரியில் மாநில அரசு இணைந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகு, மாநில அரசுக்கு சட்டத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருவாய்க்கும், உண்மையான வருவாய்க்கும் அதிக இடைவெளி உள்ளது. கொரோனா பரவலும் சேர்ந்து கொண்டு பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கிவிட்டது. இன்னும் அதிலிருந்து முழுமையாக மாநில அரசு எழவில்லை. எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதால் அதை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள இழப்பீடான ரூ.11 ஆயிரத்து 185.82 கோடியை விரைவாக அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கு ரூ.2,200 கோடியை அளிக்கும்படி 15-வது நிதி கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அந்த தொகையை எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் வழங்க வேண்டும். சென்னையில் வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக 2021- 22 முதல் 2025- 26-ம் ஆண்டு வரை ரூ.500 கோடியை வழங்கும்படி 15-வது நிதி கமிஷன் தனது இறுதி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த நிதியை வழங்குவதற்கான விதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்னும் வகுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சென்னை வெள்ளத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு மாநில அரசு தனது சொற்ப ஆதாரத்தில் இருந்து செலவிட்டு வருகிறது. எனவே இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தொழில் பகுதிகளுக்கு புதிய ரெயில் பாதைகள் அமைத்துத்தரப்பட வேண்டும். இதன் மூலம் மாநில பொருளாதாரம் உயரும். அந்த வகையில் தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 4-வது பாதை, அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே 3 மற்றும் 4-வது ரெயில் பாதை, திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி -ஓசூர் இடையே புதிய ரெயில் பாதை, அரக்கோணம்- காஞ்சீபுரம் -செங்கல்பட்டு இடையே இரட்டை ரெயில் பாதை, சென்னை -மதுரை மற்றும் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரெயில் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விரைவாக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.