மோசடி நிறுவனங்களில் சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
CCB police conducted raide in 5 places om chennai and thiruvallur
வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி அது தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
சென்னை நகரில் சுமார் 60க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா மோசடியில் ஈடுபட்ட மோகன்ராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகளை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் பணமோசடி செய்ததுடன் போலி நேர்முகத் தேர்வுகளை வேலை தேடும் இளைஞர்களுக்கு நடத்தி, அவர்களுடைய கையொப்பத்தை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக தனசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் கடந்த மார்ச் மாதம் மோசடி ஆசாமி மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே மோகன்ராஜ் முகப்பேரில் நடத்தி வந்த வனாஸ்பையர் பிரைவேட்லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நேற்று (23.05.2022) திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர், செங்குன்றம் சென்னை தி.நகர், பாடி, பெரம்பூர் ஆகிய 5 இடங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனைகள் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 9 லேப்டாப்கள், 1 கணினி, 370 பயோடேட்டாக்கள், உண்மைச் சான்றிதழ்கள் 71, சான்றிதழ்களின் நகல்கள் 150, 3 CPU-க்கள், 400 படிவங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களின் கல்விச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியுள்ளார். கைதான மோகன்ராஜ் தன்னை செல்வாக்கான நபர் என்பதைக் காட்டிக் கொண்டு பொது மக்களை ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கின் தொடர்புடைய முக்கிய எதிரி மோகன்ராஜ் கடந்த ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.