Take a fresh look at your lifestyle.

சோதனைகளை வெற்றிப் படிகளாக்கி சரித்திரம் படையுங்கள்: எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

64

பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், சோதனைகளை எல்லாம் வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படையுங்கள் என உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சர்வதேச ‘‘மகளிர் தின’’த்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8ம் நாளில் ‘‘சர்வதேச மகளிர் தினம்’’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தான் பெற்ற பிள்ளைக்கு தாயாக, தன்னைப் பெற்ற தாய்க்கு மகளாக, கட்டிய கணவனுக்கு மனைவியாக, உடன்பிறந்தோருக்கு உற்ற சகோதரியாக, நல்லொழுக்கம் கற்றுத் தரும் பாட்டியாக, நம் உறவு முறைகளின் அனைத்து அங்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும், மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் எழுச்சி மிகுந்த பாடல்களைப் பாடினார்கள். கனல் தெறிக்கும் கருத்துகளைத் தாங்கி, விழிப்புணர்வை ஊட்டி, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்திய அந்தப் பாடல்களை முழுவதுமாய் உள்வாங்கி, பாரதி வடித்த புதுமைப் பெண்ணாகவே மாறி பெண்கள் நலனுக்கென எண்ணிலடங்கா திட்டங்களைத் தீட்டி, இணையில்லா வகையில் செயல்படுத்திக் காட்டியவர் புரட்சித் தலைவி அம்மா.

அம்மா, பெண்கள் நலனுக்கென செயல்படுத்திய பல்வேறு அளப்பரிய திட்டங்களில் ஒருசிலவற்றை இந்த இனிய நாளில், உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் நாட்டில் பெண் சிசு கொலையைத் தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொட்டில் குழந்தைத் திட்டம்; பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்; மகளிர் எழுத்தறிவுத் திட்டம்; பெண்களின் சுகாதாரத்தினை பேணும் வகையில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்; மகளிர் சுகாதார வளாகங்கள்; பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம்; 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம்; தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை வழங்கும் பெண்கள் திருமண உதவித் திட்டம்;

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; மகளிர் சிறப்பு அதிரடிப் படை; பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்; விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்; வீட்டில் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம்;

உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கென மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்; வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான விடுதிகள்; பெண்களை சுயசார்புடையவர்களாக உயர்த்தும் பொருட்டு சமூக நலத் துறையின் கீழ் 123 மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள்; பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை முழுமையாக உறுதி செய்வதற்கு, சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில் நிர்பயா நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்; மகளிர் பாதுகாப்பை உறுதிசெய்திட ‘‘காவலன்” கைப்பேசி செயலி;

பெண்கள் உரிமைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலை குறித்து புகார் தெரிவிக்க, பெண்களுக்கென பிரத்யேகமாக இணையதளத்தில் வடிவமைக்கப்பட்ட புகார் பெட்டி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மகளிர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ள 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்கள், தமிழகப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே அம்மாவினால் செயல்படுத்தப்பட்டன.

அதே போல், எந்த ஓர் அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில், அண்ணா தி.மு.க.வின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகப் பொறுப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் கழகப் பணியாற்றி வருவதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்துகிறேன். அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான கழக ஆட்சியில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,26,065 பயனாளிகளுக்கு 2,595.30 கிலோ தங்கம், ரூபாய் 1,238.17 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4,000 ரூபாய் மதிப்புள்ள அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் மகளிருக்கு ரூபாய் 25,000 மானியத்துடன் 2.85 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கிட ரூபாய் 740 கோடி மானியம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் 27.79 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதி உதவியாக ரூபாய் 3,170 கோடி வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட நிதியுதவி ரூபாய் 18,000 ஆக உயர்வு. 67 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் பயன். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1,11,444 கறவை மாடுகள் மற்றும் 52,88,608 வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள். 3,32,460 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 45,77,484 மகளிருக்கு, ரூபாய் 81,052 கோடி கடன் உதவி. பெண் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு 3 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க 50 சதவீதம் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்கள் பெண்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நிறை வேற்றப்பட்டுள்ளன என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய்த் திகழும் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது உளங்கனிந்த மகளிர் தின வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். பெண்மையை வணங்குவோம்! பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையால் பெருமைகொள்வோம்!

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.