சைபர்கிரைம் விழிப்புணர்வு புத்தகம் ‘முத்துவும் முப்பது திருடர்களும்’ – கமிஷனர் சங்கர்ஜிவால் வெளியிட்டார்
‘முத்துவும் முப்பது திருடர்களும்’ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று வெளியிட்டார்.
பெருகி விரியும் இணைய வெளியைப்போல, இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணைய வழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், போதிய விழிப் புணர்வும் இல்லாததால், அவர்கள் விரிக்கும் குற்ற வலை பின்னல்களில் மக்கள் மாட்டிக் கொண்டு தங்களது பணத்தை இழக்கின்றனர். ஆகவே, பொதுமக்களை சைபர் குற்றங் களிலிருந்து காப்பாற்றவும், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெறவும், கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், தற்போதைய நடைமுறையில் உள்ள 30 சைபர் குற்ற செயல்முறைகள் குறித்து எளிதில் புரியும்படியான விளக்கப்படங்களுடன் கூடிய “முத்துவும் முப்பது திருடர்களும்” என்ற பெயரில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ புத்தகத்தை இன்று (08.11.2022) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் வெளியிட்டார். இந்த சைபர் விழிப்புணர்வு புத்தகத்தை QR Code மூலமாகவும், இணையவழி Link மூலமாகவும். கணினி, செல்போன் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து படித்து, பொதுமக்கள் சைபர் குற்றங்களிலிருந்து தங்களையும், தங்களது பணத்தையும் பாதுகாத்து கொள்ள இப்புத்தகம் பேருதவியாக இருக்கும்.
பல்வேறு நன்மைகள் பயக்கும், இணையவழி பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது, ஆனால் பொதுமக்கள் நினைத்தால், சைபர் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இயலும். எனவே, முத்துவும் முப்பது திருடர்களும் என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை பொதுமக்கள் அனைவரும் படித்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கமிஷனர் சங்கர்ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்தப் புத்தகத்தை தயாரித்த கூடுதல் துணை ஆணையாளர் ஷாஜிதாவை சங்கர்ஜிவால் பாராட்டினார்.