சென்னை நகர சைபர்கிரைம் பெண் கூடுதல் துணைக்கமிஷனருக்கு நட்சத்திரக்காவல் விருது வழங்கி கமிஷனர் சங்கர்ஜிவால் கவுரவித்துள்ளார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சிறந்த காவல் பணியாற்றும் அதிகாரி களுக்கு மாதந்தோறும் நட்சத்திர காவல் விருது வழங்கி கவுரவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த டிசம்பர் -2022 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணைக்கமிஷனர் ஷாஜிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ. 5 ஆயிரம் வெகுமதி வழங்கி சங்கர்ஜிவால் கவுரவித்தார். தற்போதைய நவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சைபர் குற்றங்களை தடுக்க, முத்துவும் 30 திருடர்களும் என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தை சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயார் செய்து கொடுத்து சிறந்த காவல் பணியாற்றியவர் ஷாஜிதா. அனைத்து மக்களும் அந்தப் புத்தகத்தை படிப்பதற்கு வசதியாக இணையதளத்தில் வெளியிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புத்தகத்தினை நேரடியாக படிப்பதற்கு QR Code யும் வெளியிட்டு, சைபர் குற்றங்கள் குறித்து புதிய தகவல்களை ஷாஜிதா அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.