சென்னை, சைதாப்பேட்டையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திருடிய 2 நபர்களை பிடித்து அடித்ததில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்ததால், கொலை வழக்குப் பதிவு செய்து, 7 கட்டுமான பொறியாளர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, சைதாப்பேட்டை, தாடாண்டர்நகர் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், சத்யமூர்த்தி கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தின் கீழ் தொழிலாளிகள் கட்டு மான பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (19.12.2022) மாலை 3 நபர்கள் மேற்படி கட்டுமான பகுதிக்குள் நுழைந்து, இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது, கட்டுமான தொழிலாளிகள் மற்றும் பொறியாளர்கள் கண்டுபிடித்து, அவர்களை பிடிக்க முற்பட்டபோது, ஒரு நபர் தப்பியோடிவிடவே, மற்ற 2 நபர்கள் பிடிபட்டனர்.
பொறியாளர்ர்கள் பிடிபட்ட ஷாயின்ஷா மற்றும் 16 வயது சிறுவனை பிடித்து கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதில், காயமடைந்த நிலையில், பிடிபட்ட நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர், பொறியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, காயமடைந்த இருவரையும் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், ஷாயின்ஷா சிகிச்சை பலனின்றி நேற்று (19.12.2022) இரவு இறந்தார். இது குறித்து தகவலறிந்த J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்து, கொலை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இந்நிலையில் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 கட்டுமானப் பொறியாளர்கள் விருதுநகரைச் சேர்ந்த ஜெயராம் (30), தூத்துக்குடி உமா மகேஸ்வரன் (33), நாமக்கல் உமாசுப்ரமணியன் (29), தென்காசி அஜித்குமார் (27), திருவண்ணாமலை சக்திவேல் (29), நம்பிராஜ் (29), கேரளா, இடுக்கி மனோஜ் (21), சேலம் சிவபிரகாசம் (22) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேற்படி 8 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று (20.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.