Take a fresh look at your lifestyle.

சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பெண் இணைக்கமிஷனர்: டுவிட்டரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

73

சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சென்னை நகர வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யா பாரதிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

சென்னை நகர வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி. சமூகவிரோதிகள் நிறைந்த வடசென்னைப் பகுதியில் போலீசார் எப்போதும் இரவு சமயத்தில் அதிக அளவில் ரோந்துப் பணியில் செல்வது வழக்கம். கடந்த மாதம் சென்னை நகர வடக்கு மண்டல இணைக்கமிஷனராக பெண் ஐபிஎஸ் அதிகாரி ரம்யாபாரதி நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதல் வடசென்னையில் அதிக அளவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா, மெத்தபெடமைன் கடத்தி வந்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இணைக்கமிஷனர் ரம்யாபாரதி தனக்கென தனிப்படை அமைத்து இந்த அதிரடி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது உயர் அதிகாரிகள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற வைத்தது.

இந்நிலையில் இணைக்கமிஷனர் ரம்யாபாரதி நேற்று முன்தினம் இரவு திடீரென சைக்கிளிங் புறப்பட்டார். காக்கி சீருடையில் அல்லாமல் சைக்கிளிங்குக்குறிய உடையில் மிகவும் சிம்பிளாக புறப்பட்டார் ரம்யா. நடுநிசியில் வட சென்னையில் போலீசின் இரவு நேர ரோந்துக்களம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்வையிட ரம்யா பாரதி சைக்கிளில் வடசென்னையில் வலம் வந்தார். அதிகாலை 2.45 மணிக்கு சைக்கிளில் வடசென்னையில் ரோந்து பணியை அவர் தொடங்கிய அவர் சுமார் 1 ½ மணி நேரம், 9 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பேட்ரோலிங் சென்றார். சென்னை தலைமைச் செயலகம் கோட்டை போலீஸ் எல்லையில், வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, எஸ்பிளனேடு போலீஸ் நிலைய எல்லையில், ராஜாஅண்ணாமலை மன்றம் சந்திப்பு, குறளகம் சந்திப்பு, பூக்கடை போலீஸ் எல்லைக்குள் என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக ரம்யாபாரதியின் இந்த சைக்கிள் பேட்ரோலிங் சென்றது.

அடுத்து யானைக்கவுனி போலீஸ் எல்லைக்குள் நுழைந்து, ஆர்.கே.நகர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைகளில் எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக சென்று, இறுதியாக தண்டையார்பேட்டை போலீஸ் எல்லைக்குள் நுழைந்தார். அதிகாலை 4 மணியளவில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனது சைக்கிள் ரோந்து பணியை ரம்யா பாரதி முடித்தார். வழியில் ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களுக்கு சென்று ரம்யா திடீர் ஆய்வு செய்து சப்ரைசையும் ஏற்படுத்தினார். வழி நெடுக போலீசார் ரோந்து வாகனங்களில் தூங்குகிறார்களா, அல்லது விழிப்போடு பணியாற்றுகிறார்களா, என்பதையும் பார்வையிட்டார். சென்ற இடங்களில் எல்லாம் போலீசார் விழிப்போடு பணியாற்றியபடி இருந்ததை கண்டார். ரம்யா பாரதியின் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் ரம்யா பாரதியின் நள்ளிரவு ரோந்துப் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரம்யா பாரதிக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி.க்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என கூறியுள்ளார்.