Take a fresh look at your lifestyle.

சேலையூர் நகைக்கடையில் ரூ. 1.50 கோடி நகைகள் கொள்ளை: மின்னல் வேக நடவடிக்கையில் முழு நகைகளையும் மீட்ட தாம்பரம் காவல் ஆணையரகம்

52

சென்னை, சேலையூரில் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் மூன்று பேரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் ஒன்றரை மணி நேரத்தில் துப்புதுலக்கி கைது செய்து நகைகள் அனைத்தையும் மீட்டுள்ளனர்.

 

சென்னை, வேளச்சேரி மெயின்ரோடு, கவுரிவாக்கத்தில் ப்ளூ ஸ்டோன் ஜுவல்லரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். கடையில் முன்னெச்சரிக்கை அலாரம், சிசிடிவி என திருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப் பட்டிருந்துள்ளன. இன்று (நேற்று) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கடை ஊழியரின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார். மீண்டும் 6 மணியளவிலும் எச்சரிக்கை ஒலித்துள்ளது. அது தொடர்பாக அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

ஊழியர்களும், சேலையூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது உள்ளே ஷோகேசில் வைத்திருந்த சுமார் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நகைக்கடையின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த பைப் லைன் வழியாக மொட்டை மாடிக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லிப்ட் ஜன்னல் வழியாக கடைக்குள் நுழைந்து படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்று அங்கு கண்ணாடி டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வாரி சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசில் புகார் அளிக்கப் பட்டதும் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் விரைந்து செயல்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 வடமாநில கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் வந்ததும் இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். பள்ளிக்கரணை துணைக் கமிஷனர் ஜோஷ் தங்கையா தலைமையிலான தனிப்படையினர் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் ஆய்வு செய்ததில் 3 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் அவர்கள் அணிந்திருந்த டீஷர்ட்டையும் வைத்து கொள்ளையர்கள் நகைக்கடைக்கு மிக அருகில் இருந்த டீக்கடையில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அதனையடுத்து டீக்கடையில் வேலை செய்து வந்த 16 வயது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 சிறார்களும் கைது செய்யப்பட்டனர். விசார ணையில் அவர்கள் ப்ளூ ஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். மொட்டை மாடியில் இருந்து லிப்ட் ஜன்னலுக்குள் அவர்கள் சுத்தியலில் ஓட்டை போடும் சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன. கொள்ளையர்கள் வேலை செய்து வந்த டீக்கடை மொட்டை மாடி அறையில் மறைத்து வைத்திருந்த ரூ. 1.50 கோடி தங்க நகைகளும் மீட்கப்பட்டன’’ இவ்வாறு தெரிவித்தார்.

காலை 7 மணிக்கு வந்த புகாரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 8.30 மணிக்கு கொள்ளையர்களை கைது செய்து நகைகள் முழுவதையும் மீட்ட துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையிலான தனிப்படையினரை கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.