சென்னை தாம்பரத்தில் செல்போன் திருடனை அரை கிலோ மீட்டர் தூரம் திருடனை விரட்டிப் பிடித்த பெண் காவலரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரிபவர் காளீஸ்வரி. கடந்த 4ம் தேதியன்று காளீஸ்வரி தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த நின்ற பேருந்தில் ஏறிய வட மாநில இளைஞர் ஒருவர், திடீரென பேருந்தில் இருந்த பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தான். இதனைக் கண்டு சுதாரித்த காளீஸ்வரி திருடனை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார். விசார ணையில், அவன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பது தெரியவந்தது. அவனை தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.