செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
செல்போன் திருடனை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த கர்ப்பிணிப் பெண் காவலரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 24ம் தேதியன்று சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய பெண் காவலர் சுசீலா 48பி அரசு பேருந்தில்
பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் இருந்து செல்போனைப் பறித்துக் கொண்டு நபர் ஓட முயன்றார். இதனைக் கண்ட பெண் காவலர் சுசிலா விரட்டிச் சென்று துணிச்சலாக பிடித்தார். அந்த நபரை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த திருடன் பெயர் ஜாபர் ஷெரீப் என்றும் திருவிக நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மூன்று மாத கர்ப்பிணியான பெண் காவலர் சுசிலாவின் இந்தச் செயல்
பொதுமக்கள் இடையே மிகுந்த பாராட்டை பெற்றது. அதனையடுத்து நேற்று பெண் காவலர் சுசீலாவை டிஜிபி சைலேந்திரபாபு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.