Take a fresh look at your lifestyle.

செல்போன் ஆப் மூலம் லோன் மோசடி: உபி மற்றும் ஹரியானா நபர்கள் 5 பேர் கைது

loan app fraud 4 persons arrested by chennai cyber crime police special team

82

லோன் தருவதாக கூறி செல்போன் ஆப் மூலம் பல நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட உபி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 5 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

லோன் தருவதாக அங்கீகரிக்கப்படாத செல்போன் செயலிகளின் மூலம் லோன் பெற்று திரும்ப செலுத்த தாமதமாகும்போது பொதுமக்கள் மிரட்டப்படும் சம்பவங்களும், மார்பிங் போட்டாக்களை வெளியிட்டு அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அது தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, சைபர் கிரைம் துணைக்கமிஷனர் கிரண் ஸ்ருதி தலைமையில், கூடுதல் துணை கமிஷனர் ஷாஜிதா ஆலோசனையின்பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் கிருத்திகா நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில், எஸ்ஐக்கள் பாஸ்கரன், மேன்லி லாமெக், வனிதா மற்றும் தலைமைக்காவலர்கள் ஜெகநாத், சிவா, பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனிப்படையினர் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செல்போன் செயலிகளை ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடனான மோசடி நபர்களின் குறுந்தகவல்கள் (SMS), போன் அழைப்புகளை (Call details) ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அனைத்து லோன் செயலிகளின் மிரட்டல் தொடர்பான புகார்களை ஒன்றிணைத்து ஒரு தகவல் தளம் (Data Base) உருவாக்கப்பட்டது. இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டு லோன் செயலிகளோடு தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இமெயில் முகவரிகள் (Email IDs), வங்கி கணக்குகள், 900 க்கும் அதிகமான வாட்சப் (Whatsapp) எண்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) கோரிக்கை அனுப்பப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டது.

அதன்பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டதில், லோன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலிருந்து செயல்படுவது தெரியவந்தது. அதனையடுத்து இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் தனிப்படை வெளி மாநிலங்களுக்கு சென்று, உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநில காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். லோன் செயலிகளின் கலெக்சன் ஏஜென்ட்டான தீபக்குமார் பாண்டே (வயது 26) என்பவரை 27.08.2022 அன்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் மற்றொரு கலெக்ஷன் ஏஜென்ட் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குரு ஜித்தேந்தர் தன்வர் (வயது 24), அவரது சகோதரி டீம் லீடர் நிஷா (22) ஆகிய இருவரையும் 28.08.2022 அன்று ஹரியானா மாநிலம் குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மோசடியில் தொடர்புடைய கலெக்ஷன் ஏஜென்ட்கள் மற்றும் டீம் லீடர்களை கண்காணிக்கும் டீம் மேனேஜர் டில்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) என்பவரை 28.08.2022 அன்று சைபர்கிரைம் தனிப்படையின் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் 30.08.2022 அன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில், இந்த கும்பல் பொதுமக்களை மிரட்டி லோன் பணத்தை கட்ட வைப்பதும், சில நேரங்களில் லோன் பணத்தை விட அதிகமான பணத்தை வசூலித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட லோன் செயலிகள் மூலம் கடன் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த லோன் மோசடி கும்பலானது சாப்ட்வேர் கம்பெனி அமைப்பு போன்று கலெக்ஷன் ஏஜெண்ட்ஸ், டீம் லீடர், டீம் மேனேஜர், டீம் ஹெட் என செயல்பட்டதும், மேலும் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே (work from home) வேலை பார்ப்பதால் மோசடி நபர்களை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கடன் வசூலில் ஈடுபடும் இவர்களுக்கு ஒருவரையொருவர் யாரென்று தெரியாது. ஆன்லைனில் மட்டுமே தொடர்பில் இருந்து கொண்டு, இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள லோன் பெற்ற நபர்களிடம் வீட்டிலிருந்தபடியே கடனை வசூலிக்க மிரட்டுவது, அசிங்கமாக பேசுவது மற்றும் ஆபாச படங்களை அனுப்புவது என்று குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

லோன் செயலி மோசடி நெட்வொர்க்கின் குற்றவாளிகளை அவர்களது மாநிலத்திற்கு சென்று எதிரிகளை கைது செய்த சைபர்கிரைம் துணைக்கமிஷனர் கிரண் ஸ்ருதி தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.